Deepfake video.. இதெல்லாம் ரொம்பத் தப்பு.. அச்சமாக இருக்கிறது.. ராஷ்மிகா மந்தனா வேதனை!

Su.tha Arivalagan
Nov 06, 2023,06:36 PM IST
மும்பை: எனது முகத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட deepfake video சமூக வலைதளங்களில் வைரலாகி வருவது எனக்கு மிகவும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரு சமூகமாக இதை எதிர்த்து அனைவரும் குரல் கொடுக்க வேண்டும் என்று நடிகை ராஷ்மிகா மந்தனா கூறியுள்ளார்.

ஜாரா படேல் என்ற இங்கிலாந்துப் பெண்ணின் வீடியோவை எடுத்து அதில் ராஷ்மிகா மந்தனாவின் முகத்தைப் பொறுத்தி, deepfake தொழில்நுட்ப முறையில் உருவாக்கப்பட்ட வீடியோ பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இந்த வீடியோவை உருவாக்கியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.

இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து ராஷ்மிகா மந்தனா கருத்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவ்ர் வெளியிட்டுள்ள டிவீட்டில் கூறியுள்ளதாவது:

என் முகத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட deepfake video  சமூக வலைதளங்களில் பரவி வருவது எனக்கு அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. என்னைக் காயப்படுத்தியுள்ளது.



இது எனக்கு மட்டுமல்ல, நாம் அனைவருக்கும், குறிப்பாக பெண்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. தொழில்நுட்பத்தை தவறாகப் பயன்படுத்தினால் அது எந்த அளவுக்கு அபாயத்தை ஏற்படுத்தும் என்பதற்கு இது சிறந்த உதாரணம்.

ஒரு பெண்ணாக, ஒரு நடிகையாக எனது குடும்பத்தினர் , நண்பர்கள், நலம் விரும்பிகள் இப்போது எனக்குப் பாதுகாப்பாக, ஆதரவாக இருக்கின்றனர். என்னைப் புரிந்து கொள்ளக் கூடியவர்கள் உடன் உள்ளனர். இதுவே நான் பள்ளியில் படிக்கும்போதோ அல்லது கல்லூரியில் படிக்கும்போதோ நடந்திருந்தால் எனது நிலை என்னாகியிருக்கும். இதை என்னால் கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை.

இந்தப் பிரச்சினையை ஒரு சமூகமாக நான் சரி செய்ய வேண்டும். நம்மில் பலர் பாதிக்கப்படுவதற்கு முன்பு உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று நான் கருதுகிறேன் என்று கூறியுள்ளார் ராஷ்மிகா மந்தனா.