ஷவ்வால் மாத பிறை தெரிந்தது.. தமிழ்நாட்டில் நாளை ரம்ஜான் பெரு விழா.. தலைமை காஜியார் அறிவிப்பு
சென்னை: தமிழ்நாட்டில் ஷவ்வால் மாத பிறப்பைக் குறிக்கும் பிறை தெரிந்ததைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் நாளை ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என்று தமிழ்நாடு அரசின் தலைமை காஜியார் அறிவித்துள்ளார்.
ரமலான் நோன்புக் காலம் கடந்த ஒரு மாதமாக கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. இன்றுடன் 30 நாட்களை நோன்புக்காலம் தொட்டது. இந்த நிலையில் இன்று மாலையில் ஷவ்வால் மாத பிறப்பைக் குறிக்கும் பிறை தெரிந்தது. இதையடுத்து ரம்ஜான் பண்டிகை நாளை கொண்டாடப்படும் என்று தமிழ்நாடு அரசின் தலைமைக் காஜியார், டாக்டர் சலாஹுதீன் முகம்மது அயூப் அல் அஸாரி, அல் குவாதிரி அல் கஸ்நாசினி அறிவித்துள்ளார்.
மார்ச் 2ம் தேதி தமிழ்நாட்டில் ரமலான் நோன்பு தொடங்கி தற்போது பெருநாள் வந்துள்ளது. அதேசமயம், கோவை உள்ளிட்ட சில பகுதிகளில் இன்றே ரம்ஜான் கொண்டாடப்பட்டது. சவூதி அரேபியாவிலும் இன்றுதான் ரம்ஜான் கொண்டாடப்பட்டது. கேரளாவிலும் இன்று கொண்டாடப்பட்டது.
தமிழ்நாடு முழுவதும் நாளை ரம்ஜான் பண்டிகை என்று அறிவிக்கப்பட்டதால் நாளை பண்டிகையைக் கொண்டாடும் ஏற்பாடுகளில் இஸ்லாமியர்கள் இறங்கியுள்ளனர். பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் ரம்ஜான் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.