ஈத் முபாரக்... தமிழ்நாடு  முழுவதும் இன்று ரம்ஜான்.. சிறப்புத் தொழுகையுடன் கோலாகல கொண்டாட்டம்

Meenakshi
Apr 11, 2024,10:06 AM IST

சென்னை: தமிழ்நாடு முழுவதும் இன்று கோலாகலமாக ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.


முஸ்லிம்களின் புனித மாதமாக ரம்ஜான் மாதம் கருதப்படுகிறது. இந்த மாதம் முழுவதும் முஸ்லிம்கள் நோன்பு  இருந்து ரம்ஜான் பண்டிகையை கொண்டாடுவது வழக்கம். தமிழ்நாட்டில் இன்று ரம்ஜான் பண்டிகை கோலகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. 


வழக்கமாக ரம்ஜான் பண்டிகையின் தேதியானது ஒவ்வொரு ஆண்டும் சந்திரனை மையமாக கொண்டு கொண்டாடப்படும். பிறை தெரிந்த பிறகு ரம்ஜான் கொண்டாடுவதால் உலகம் முழுவதும் ஒரே நாள் கொண்டாடாமல், ஒன்று அல்லது இரண்டு நாட்கள் வேறுபாட்டில் கொண்டாடப்படுவது வழக்கம். அதன் படி நேற்று சவூதி அரேபியாவில் ரம்ஜான் கொண்டாடப்பட்டது. சவூதியில் நேற்று ரம்ஜான் கொண்டாடப்பட்டதால்  கோவையிலும் நேற்றே ரம்ஜான் கொண்டாடப்பட்டது. 




தமிழ்நாட்டின் இதர பகுதிகளிலும், நாட்டின் பெரும்பாலான பகுதிகளிலும் இன்று ரம்ஜான் கொண்டாடப்படுகிறது.  சென்னை, மதுரை, நெல்லை, கோவை உள்பட மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் காலையிலேயே சிறப்புத் தொழுகையுடன் ரம்ஜான் கொண்டாடப்பட்டது. 


மதுரை எல்லிஸ் நகரில் நடந்த சிறப்புத் தொழுகையில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். அதேபோல கோவை உக்கடம் பகுதியில் நடந்த தொழுகை நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். திருச்சியில் சையத் முர்துஸா பள்ளி வளாகத்தில் நடந்த தொழுகை நிகழ்ச்சியில் ஏராளமானோர் திரண்டு வந்து பங்கேற்றனர். டெல்லி ஜம்மா மஸ்ஜித் உள்ளிட்ட நாட்டின் அனைத்து பள்ளிவாசல்கள், மசூதிகளிலும் சிறப்புத் தொழுகை நிகழ்ச்சிகள் இன்று நடைபெற்றன.