சென்னையில்.. திருப்பதி தேவஸ்தானம் சார்பில்.. அழகிய திருமேனி கொண்ட.. ராமர் சிலை திறப்பு!

Manjula Devi
Jan 05, 2024,12:52 PM IST

சென்னை: அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவை முன்னிட்டு, திருப்பதி தேவஸ்தானம் சார்பில்,  சென்னையில் உள்ள அதன் தகவல் மைய வளாகத்தில், 10.5 அடி உயரமுள்ள ராமர் சிலை ஜனவரி 4ஆம் தேதி பிரதிஷ்டை செய்து, திறக்கப்பட்டுள்ளது.


அயோத்தி ஸ்ரீராமர் கோவில் திறப்பு விழா ஜனவரி 22ஆம் தேதி நடைபெற உள்ளது. அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவை காண  நாடு முழுவதும் ஏராளமான பக்தர்கள் காத்து கொண்டிருக்கின்றனர். கோவில் திறப்பு விழாவிற்கு வருகை தரும் மக்களுக்காக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. விழாவில் பங்குபெறும் சிறப்பு விருந்தினர்களுக்கு உத்திரப்பிரதேச அரசு  மற்றும் ஸ்ரீராம ஜென்ம பூமி தீர்த்த சாஸ்திர டிரஸ்ட் சார்பிலும் பிரம்மாண்ட சிறப்பு ஏற்பாடு பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. 


6000க்கும் அதிகமான அழைப்பிதழ்கள் விஐபிகளுக்கு கொடுத்து அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவிற்கு அழைப்பும் விடுக்கப்பட்டு வருகிறது. அயோத்தி ராமர் கோவிலில் வைக்கப்படவுள்ள சிலையை கர்நாடக மாநிலத்தை சேர்ந்த யோகி ராஜ் என்ற சிற்பக் கலைஞர் வடித்துள்ளார். இந்த சிலை 51 இன்ச் உயரம் கொண்டது. அயோத்தி கோயிலில் இந்த சிலை பிரதிஷ்டை செய்த பின்னர் புனித நீர் ஊற்றப்படும். இதற்காக 155 நாடுகளில் இருந்து புனித நீர் கொண்டுவரப்பட்டு, அயோத்தியில் சேகரிக்கப்பட்டு வருகிறது.




இந்நிலையில் திருப்பதி தேவஸ்தானத்தின் சார்பில் சென்னை தி நகரில் உள்ள அதன் தகவல் மைய வளாகத்தில் உள்ள கோவிலில் 10.5 அடி உயரம் கொண்ட ராமர் சிலை ஜனவரி 4ஆம் தேதி திறக்கப்பட்டது. இந்த சிலை ஸ்ரீ வெங்கட பெருமாள் கோவிலில் நுழைவாயில் பகுதியில்  அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலையை மக்கள் வெளியில் எங்கிருந்து பார்த்தாலும் தெரியும் விதமாக ஒன்றரை அடி பீடத்தின் மீது அமைத்துள்ளனர்.


இந்த சிலையைப் பார்த்தால் காணக் கிடைக்காத தெய்வீக குணமும், ராமரின் கம்பீரமான தோற்றமும், நம் கண் முன்னே பிரதிபலிக்கிறது. கம்பீரமான பார்வை, இடது கையில் வில், வலது கையில் அம்பு, நீல நிற மேனி, ஜொலி ஜொலிக்கும் நகைகள், பார்ப்பதற்கே நேர்த்தியான அழகு, அழகான புன்னகை என கண்களை கவரும் விதமாக ராமரின் அழகு சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இந்த சிலையை காண ஏராளமான பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.


அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவை முன்னிட்டு திருப்பதி தேவஸ்தானம் சார்பில் தி. நகர் கோவிலில் பஜனைகள், சிறப்பு நிகழ்ச்சிகள், ஆன்மீக சொற்பொழிவுகள் என பல்வேறு வகையான நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஜனவரி 4-ம் தேதி முதல் 22ஆம் தேதி வரை இவை நடைபெறும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.