Ramanathapuram Rains: ராமநாதபுரத்தை வச்சு செய்த மேக வெடிப்பு.. மழை தொடருமாம் மக்களே!

Manjula Devi
Nov 21, 2024,10:26 AM IST

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் திடீரென ஏற்பட்ட மேக வெடிப்பு காரணமாக மூன்று மணி நேரத்தில் 19 சென்டிமீட்டர் மழை கொட்டு தீர்த்த நிலையில், அங்கு மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 


குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் பரவலாக கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. அதிலும் தென் மாவட்டங்களில் மழை புரட்டிப்போட்டு வருகிறது. அந்த வரிசையில் ராமநாதபுரத்தில் நேற்று திடீரென மேக வெடிப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக ராமநாதபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது. அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குள் முழங்கால் அளவு மழைநீர் தேங்கியதால் நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.




பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பகுதிகளிலும் சாலைகளிலும் மழை நீர் தேங்கி ஆறு போல் ஓடியது. அதே சமயத்தில்

பாம்பனில் காலை 11:30 மணிக்கு பிடித்த கனமழை பிற்பகல் 2:30 வரை இடைவிடாமல் கொட்டி தீர்த்தது. மூன்று மணி நேரத்தில் பெய்த இந்த கன  மழையால் 19 சென்டிமீட்டர் மழை பதிவானது. மேலும் அப்பகுதிகளில் கனமழை, கடல் சீற்றத்தின் எதிரொலியால் கடலில் மண்ணரிப்பு ஏற்பட்டு தெற்கு வாடி பகுதியில் உள்ள குடியிருப்புக்குள்  மழை நீர் புகுந்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது.


ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரமாக தொடர்ந்து கனமழை கொட்டி தீர்த்து வரும் வேளையில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களை முடிவெடுக்கலாம் என முதன்மை கல்வி அலுவலர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.


ராமநாதபுரத்தில் மேக வெடிப்பு காரணமாகத்தான் கன மழை கொட்டி தீர்த்தது என வானிலை ஆர்வலர்கள் ஏற்கனவே விளக்கம் அளித்துள்ள நிலையில் ராமேஸ்வரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளிலும் பரவலாக கனமழை கொட்டி தீர்த்தது. கடந்த 24 மணி நேரத்தில் ராமேஸ்வரத்தில் அதிகபட்சமாக  44 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. அதேபோல் தங்கச்சி மடம் 39 சென்டிமீட்டர் பாம்பன் 28 சென்டிமீட்டர் மண்டபம் 27 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது. கடலடியில் 7.3 செமீ மழையும், முதுகுளத்தூர் மற்றும் கமுதியில் தலா 5 சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.


தூத்துக்குடி - திருச்செந்தூரில் கன மழை


அதேபோல் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளிலும் தொடர்ந்து மூன்றாவது நாளாக நல்ல மழை பெய்து வருகிறது குறிப்பாக இன்று அதிகாலை முதல் தற்போது வரை கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் திருச்செந்தூர் செல்லும் சாலைகள், கோவில் அருகே உள்ள சாலைகள், தாழ்வான இடங்கள் என முழுவதும் தண்ணீர் தேங்கி சாலையில் செல்ல மக்களுக்கு கடும் சிரமம் ஏற்பட்டுள்ளது.


இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் அடுத்த மூன்று மணி நேரத்தில் கனமழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்