நாளை ராமநாதபுரம் வருகிறார் ராஜ்நாத் சிங்
ராமநாதபுரம்: மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராம்நாத் சிங் நாளை ராமநாதபுரத்திற்கு வருகிறார்.ஜூன் 21 ம் தேதி உலக யோகா தினத்தையொட்டி தனுஷ்கோடியில் நடக்கும் நிகழ்ச்சியில் ராஜ்நாத் சிங் பங்கேற்கிறார்.
யோகா என்பது உடல் நிலைகள், சுவாச நுட்பங்கள் மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்வை மேம்படுத்த தியானம் ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் ஒரு முழுமையான பயிற்சி ஆகும். இது மனதையும் உடலையும் ஒருநிலைப்படுத்த உதவுகிறது. அதே நேரத்தில் மன அழுத்தத்தையும் பதட்டத்தையும் குறைக்கிறது.
மேலும் ஆரோக்கியமான நெகிழ்வான நிலையை மேம்படுத்துகின்றது. நினைவு, கவனம், விழிப்புணர்வு, சிந்தனை மற்றும் மொழி ஆகியவற்றில் முக்கிய பங்கு வகிக்கும் மூளையின் பாகங்களை யோகா பலப்படுத்துகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்தது யோகா. சர்வதேச யோகா தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21ல் பின்பற்றப்படுகிறது. அன்றைய தினம் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் யோகா தின நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
இத்தகைய சிறப்புடைய யோகா தின நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக, ராமநாதபுரத்திற்கு நாளை மாலை தனி ஹெலிகாப்டரில் வருகிறார் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங். முதலில் மண்டபம் கடலோர காவல்படை முகாமிற்கு சென்று அவர் பார்வையிடுகிறார். பின்னர் அங்கிருந்து உச்சிப்புளி ஐஎன்எஸ் பருந்து கடற்படை தளத்திற்கு சென்று ஆய்வு நடத்துகிறார்.
அதன்பின்னர் ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி அரிச்சல் முனையில், ஜூன் 21ம் தேதி காலை 6 மணியளவில் நடைபெறும் கடலோர காவல் படை, விமானப்படை, கடற்படை, மெரைன் போலீசாரின் யோகா தின நிகழ்ச்சியில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்கிறார். இந்த நிகழ்ச்சியில் ராமநாதபுரம் கலெக்டர், எஸ்பியும் கலந்து கொள்கின்றனர்.