உஷாரா இருங்க.. ஏமாந்துராதீங்க.. எங்க பேரைச் சொல்லி மோசடி நடக்குது.. ராஜ் கமல் பிலிம்ஸ் எச்சரிக்கை

Meenakshi
Sep 09, 2024,06:21 PM IST

சென்னை: எங்களது ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் பெயரை அனுமதியின்றி பயன்படுத்தி மோசடிகளில் ஈடுபவர்கள் மீது சட்ட ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று  கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.


ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேசனல் என்பது நடிகர் கமல்ஹாசனால் நிறுவப்பட்ட திரைப்பட தயாரிப்பு மற்றும் வெளியீட்டு நிறுவனமாகும். ஹாசன் சகோதரர்கள் என்ற பெயரில் 1981ல் ஆரம்பிக்கப்பட்டது. முதல் படம் தயாரித்து வெளியிட்ட பின்னர் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேசனல் என இதன் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.


ராஜ பார்வை, விக்ரம், ஹரே ராதா ஹரே கிருஷ்ணா, சத்யா, அபூர்வ சகோதரர்கள், குணா, தேவர் மகன், மகளிர் மட்டும், குருதிப்புனல், சதிலீலாவதி, காதலா காதலா, ஹே ராம், நளதமயந்தி, விருமாண்டி, மும்பை எக்ஸ்பிரஸ், உன்னைப்போல் ஒருவன், விஸ்வரூபம், விஸ்வரூபம் 2, உத்தம வில்லன் உள்ளிட்ட படங்களை தயாரித்து வெளியிட்ட நிறுவனம், சில காலமாக படத்தயாரிப்பில் ஈடுபடாமல் இருந்து வந்தது. தற்போது அமரன், சிம்பு 48, தக் லைஃப் உள்ளிட்ட படங்களைத் தயாரித்து வருகிறது. 




இந்நிலையில், ராஜ்கமல் நிறுவனத்தின் பெயரில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் திரைப்படங்களுக்காக எந்த ஒரு காஸ்டிங் ஏஜென்டுகளையும் நாங்கள் நியமிக்கவில்லை என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம்.


நாங்கள் தயாரிக்கும் திரைப்படங்களின் வாய்ப்பு வாங்கித் தருவதாக வரும் செய்திகள் எவ்வகையில் உங்களை வந்தடைந்தாலும் அதை நம்பவேண்டாம் என்றும் கேட்டுக்கொள்கிறோம்.


எங்களது ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் பெயரை அனுமதியின்றி பயன்படுத்தி மோசடிகளில் ஈடுபவர்கள் மீது சட்ட ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இதன் மூலம் எச்சரிக்கிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்