ராஜீவ் காந்தி வாழ்க்கையை மிகக் கொடூரமாக முடித்து விட்டனர்.. சோனியா காந்தி வேதனை

Su.tha Arivalagan
Aug 21, 2023,11:44 AM IST
டெல்லி: ராஜீவ் காந்தி தான் பதவியில் இருந்த மிகக் குறுகிய காலத்தில் நிறைய சாதனைகளைச் செய்தவர். குறிப்பாக பெண்களின் முன்னேற்றத்துக்கு அவர் நிறைய செய்துள்ளார். அவரது வாழ்க்கை மிகக் கொடூரமாக முடிக்கப்பட்டு விட்டது என்று  சோனியா காந்தி கூறியுள்ளார்.

25வது ராஜீவ் காந்தி தேசிய ஒற்றுமை விருது வழங்கும் விழா டெல்லியில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு சோனியா காந்தி உரையாற்றினார். அவரது உரையிலிருந்து சில பகுதிகள்:



ராஜீவ் காந்தியின் அரசியல் வாழ்க்கை மிகக் கொடூரமாக முடிக்கப்பட்டு விட்டது. ஆனால் தான் பதவியில் இருந்த குறுகிய காலத்தில் அவர் நிறைய சாதனைகளைச் செய்துள்ளார்.  நாட்டின் ஒற்றுமையில் வேற்றுமை என்பதில் மிகுந்த நம்பிக்கை கொண்டவர் ராஜீவ் காந்தி.  எப்போதெல்லாம் நாட்டுக்குசேவை செய்ய வாய்ப்பு கிடைத்ததோ அப்போதெல்லாம் அதைச் செய்யத் தவறாதவர்.

பெண்களின் முன்னேற்றத்துக்காகவும், உயர்வுக்காகவும் அவர் பாடுபட்டார். பஞ்சாயத்துகள்,உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு கிடைக்க போராடியவர், பாடுபட்டவர். இன்று நாடு முழுவதும் 15 லட்சத்துக்கும் மேற்பட்ட பெண்கள் உள்ளாட்சி அமைப்புகளில் உறுப்பினர்களாக இருக்கிறார்கள் என்றால் அதற்குக் காரணம் ராஜீவ் காந்திதான்.  அவரது தொலைதூரப் பார்வைதான் காரணம். மேலும் வாக்காளர்களின் வயதையும் 21 என்பதிலிருந்து 18 ஆக குறைத்தவர் ராஜீவ் காந்திதான் என்றார் சோனியா காந்தி.



1991ம் ஆண்டு மே 21ம் தேதி ஸ்ரீபெரும்புதூரில் நடந்த மனித வெடிகுண்டுத் தாக்குதலில் ராஜீவ் காந்தி கொல்லப்பட்டார் என்பது நினைவிருக்கலாம். நேற்று ராஜீவ் காந்தியின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.