54 வருஷ அரசியல்.. ஸ்டாலினுக்கு மக்கள் கொடுத்த அங்கீகாரம்.. ரஜினிகாந்த் புகழாரம்

Su.tha Arivalagan
Mar 11, 2023,12:13 PM IST
சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 54 வருடங்களாக அரசியலில் படிப்படியாக முன்னேறி முதல்வராகியிருக்கிறார். இது மக்கள் அவரது உழைப்புக்குக் கொடுத்த அங்கீகாரம் என்று நடிகர் ரஜினிகாந்த் பாராட்டியுள்ளார்.

முதல்வர் மு.க.ஸ்டாலினின் 70வது பிறந்த நாளையொட்டி சென்னையில் எங்கள் முதல்வர் எங்கள் பெருமை என்ற தலைப்பில் ராஜா அண்ணாமலை மன்றத்தில் புகைப்படக் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதை நடிகர் கமல்ஹாசன் தொடங்கி வைத்தார்.



இந்தக் கண்காட்சிக்கு பல்வேறு துறைப் பிரபலங்களும் வந்து பார்வையிட்டுச் சென்றவண்ணம் உள்ளனர். இந்த நிலையில் இன்று சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் வருகை தந்தார். அவரை அமைச்சர் பி.கே.சேகர்பாபு வரவேற்று அழைத்துச் சென்றார். கண்காட்சிக்கு நடிகர் யோகி பாபுவும் வந்திருந்தார். கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த புகைப்படங்களை ரஜினிகாந்த் பார்த்து ரசித்தார். பி.கே.சேகர்பாபு புகைப்படங்கள் குறித்து விளக்கம் அளித்தபடிவந்தார்.

கண்காட்சியை பார்த்து முடித்து விட்டு வந்த ரஜினிகாந்த் செய்தியாளர்களிடம் பேசுகையில், கடந்த 54 வருடமாக அரசியல் பயணம் மேற்கொண்டுள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின். கட்சியில் உழைத்து, படிப்படியாக முன்னேறி, பல பதவிகளை வகித்து,  இப்போது முதல்வராகியிருக்கிறார் என்றால் அது அவரது உழைப்புக்கு மக்கள் கொடுத்த அங்கீகாரம். அவர் நீண்ட நாட்கள் நல்ல ஆரோக்கியத்துடன் வாழ்ந்து மக்கள் சேவை செய்ய வேண்டும் என்று இறைவனை கேட்டுக் கொள்கிறேன் என்றார் ரஜினிகாந்த்.

"பாட்ஷா" சேகர் பாபு!



பேட்டியின்போது அமைச்சர் பி.கே.சேகர்பாபு குறித்து ரஜினி கூறுகையில், என்னை கண்காட்சிக்கு வருமாறு ரொம்ப நாட்களாகவே நண்பர் அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூப்பிட்டுக் கொண்டிருந்தார். அவசியம் வருவேன் என்று கூறியிருந்தேன். மிக அருமையாக இந்தக் கண்காட்சியை ஏற்பாடு செய்துள்ளார். சேகர்பாபு மிகவும் இனிமையானவர், விசுவாசமானவர், அன்பானவர். அவருக்கு இன்னொரு முகம் இருக்கிறது.. பாட்ஷா மாதிரி என்று கூறி சிரித்தபோது அந்த இடமே கலகலப்பாக மாறியது.

ரஜினி சொன்னதில் உண்மையும் இருக்கிறது. ஒரு காலத்தில் அதிரடி அரசியல் செய்து கொண்டிருந்தவர் பி.கே.சேகர்பாபு. சென்னையில் திமுகவின் இமாலய பலத்தை எதிர்த்து அதிமுக தாக்குப் பிடிக்க வட சென்னையில் சேகர்பாபுவும், தென் சென்னையில் ஆதி ராஜாராமும்தான் முக்கியக் காரணம். ஆனால் இன்று சேகர்பாபு அப்படியே தலைகீழாக மாறி "ஆன்மீக அரசியல்வாதி"யாக மாறி இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக கலக்கிக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.