எப்பயாச்சும் குடிக்கலாம்.. எப்பப் பார்த்தாலும் குடிக்காதீங்க.. ரஜினிகாந்த் அட்வைஸ்
Jul 29, 2023,01:25 PM IST
சென்னை: எப்போவாவது ஜாலியா நண்பர்களோடு சேர்ந்திருக்கும் போது அளவாக குடிக்கலாம். ஆனால் எப்போதும் குடித்துக் கொண்டே இருக்காதீர்கள். அதற்கு அடிமை ஆய்டாதீங்க. அது உங்களையும், உங்க குடும்பத்தையும் பாதிக்கும். எனது அனுபவத்தில் சொல்றேன் என்று கூறியுள்ளார் நடிகர் ரஜினிகாந்த்.
ரஜினிகாந்த்தை மையமாக வைத்து எப்போதும் சுற்றும் இரண்டு விஷயங்கள்.. ஸ்மோக்கிங் மற்றும் மது. இந்த இரண்டையும் அவருடன் இணைத்து பலர் பேசுவதுண்டு. ரஜினிகாந்த் சினிமாவில் ஸ்டைலாக புகை பிடித்ததால்தான் பலரும் அதைக் கற்றுக் கொண்டு அந்த கெட்ட பழக்கத்திற்கு அடிமையானார்கள் என்று பலரும் குறை கூறுவதுண்டு. ஆனால் தற்போது படங்களில் புகை பிடிப்பதை விட்டு விட்டார் ரஜினிகாந்த். புகை பிடிக்காதீங்க அது நல்லதில்லை என்று பேட்ட படத்தில் கூட ஒரு வசனமும் அவர் பேசியிருப்பார்.
அதேபோல அவரது மதுப் பழக்கத்தையும் வைத்தும் பல புலம்பல்கள் அவ்வப்போது வருவதுண்டு. அதற்கும் இப்போது அருமையான முற்றுப்புள்ளி வைத்து அட்டகாசமான அட்வைஸ் ஒன்றை ஜெயிலர் பட ஆடியோ வெளியீட்டு விழாவில் கொடுத்துள்ளார் ரஜினிகாந்த்.
ஜெயிலர் பட ஆடியோ விழாவில் ரஜினிகாந்த் பேசுகையில், நான் ஒருமுறை நள்ளிரவு தாண்டி 2 மணிக்கு குடித்து விட்டு நல்ல போதையில் வீட்டுக்குப் போனேன். எனது அண்ணன் என்னை கட்டிப்பிடித்துக் கொண்டு, அந்தப் பழக்கத்தை விட்டு விடுமுறை கூறினார்.
எப்போதாவது நண்பர்களுடன் ஜாலியாக மது அருந்தலாம். ஆனால் அதை தினசரி பழக்கமாக்காதீங்க. அதுக்கு அடிமையாகிடாதீங்க. அது உங்க ஆரோக்கியத்தைக் கெடுத்துரும். உங்க மகிழ்ச்சியைக் கெடுத்துரும். உங்களைச் சுத்தியுள்ளவங்க சந்தோஷத்தைக் கெடுத்து விடும்.
நீங்க குடிச்சா உங்க வாழ்க்கை மொத்தமும் பிரச்சினையாகி விடும். உங்க பெற்றோர்கள், உங்க குடும்பம், எல்லோருமே பாதிக்கப்படுவாங்க. அதனால குடிக்காதீங்க என்று கூறினார் ரஜினிகாந்த். "தலைவர்" சொன்ன எதையும் கேட்காமல் விட்டதில்லை அவரது ரசிகர்கள். இந்த அட்வைஸையும் அவர்கள் தட்டாமல் எடுத்துக் கொள்வார்கள் என்று நம்பலாம்.. ரசிகர்கள் மட்டும் இல்லை, எல்லோருக்குமே இந்த அட்வைஸ் பொருந்தும்.