தமிழ்த் தாய் வாழ்த்துக்கு மரியாதை கொடுக்கத் ஒருபோதும் தவறியதில்லை.. ஆளுநர் மாளிகை விளக்கம்

Su.tha Arivalagan
Jan 06, 2025,05:09 PM IST


சென்னை: தமிழ்த் தாய் வாழ்த்து மீது அதிக மரியாதை வைத்துள்ளேன். அதை அனைத்து தளங்களிலும் உரிய மரியாதையுடன் பாடியுள்ளேன். அதை அவமதிக்கும் எண்ணம் ஒரு போதும் இருந்ததில்லை என்று தமிழ்நாடு ஆளுநர் ஆர். என். ரவி கூறியுள்ளார்.


தமிழ்நாடு சட்டசபையில் இன்று காலை நடந்த விவகாரம் தொடர்பாக மீண்டும் ஒரு விளக்க அறிக்கையை ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:


தமிழ்நாடு ஆளுநர் ஆர். என். ரவி, தமிழ்நாட்டின் பாரம்பரியம், கலாச்சாரம் , தமிழ் மொழி ஆகியவற்றின் மீது மிகுந்த பற்றும், அன்பும் வைத்துள்ளார் என்பதை உறுதிப்படுத்திக் கொள்கிறோம்.   




தமிழ்நாட்டின்  தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடலின் புனிதத்தை எப்போதும்  கட்டிக் காப்பவர் ஆளுநர். அதை தான் கலந்து கொள்ளும் ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் உரியம் மரியாதை,  கண்ணியத்தோடு பாடுவது வழக்கமாக கொண்டிருப்பவர்.  உலகின் மிகவும் பழமையான, மிகுந்த புகழுடைய தமிழ் மொழி கோடிக்கணக்கான இந்தியர்களின் இதயங்களில் தனி இடம் பிடித்துள்ளது. இதை ஆளுநரும் மனதார தனது மனதில் ஏற்றிருக்கிறார். ஒவ்வொரு இடத்திலும், தமிழ்நாட்டுக்குள்ளும் சரி, தேசிய அளவிலும் சரி, தமிழ் கலாச்சாரம் மற்றும் மொழியின் பெருமையை பறை சாற்றுவதில் அவர் தவறியதே இல்லை. 


அரசியல் சாசனத்தையும், அதன் கடமைகளையும் மதிப்பது ஆளுநரின் கடமையாகும். தேசிய கீதத்தை மதிப்பதும் அரசியல் சாசனப்படி அடிப்படைக் கடமையாகும். இது தேசிய பெருமிதமும் கூட. ஒவ்வொரு மாநில சட்டசபையிலும் ஆளுநர் உரைக்கு முன்பாகவும்,  இறுதியாகவும் தேசிய கீதம் இசைக்கப்படுவது என்பது மரபாகும். மேலும் தேசிய கீதம் தொடர்பான நடைமுறையிலும் கூட இது கட்டாயம் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதுகுறித்து நான் பலமுறை முன்கூட்டியே நினைவூட்டியும் கூட அத்தனை கோரிக்கைகளும் நிராகரிக்கப்பட்டன என்பது துரதிர்ஷ்டவசமானது.


இன்றும் கூட ஆளுநர் உரைக்கு முன்பாக தேசிய கீதம் இசைக்கப்படவில்லை அல்லது பாடப்படவில்லை. இதுகுறித்து மரியாதைக்குரிய வகையில் முதல்வருக்கும், சபாநாயகருக்கும் நினைவூட்டியும் கூட அந்தக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. ஆளுநர் உரைக்கு முன்பாக தேசிய கீதம் பாடப்படாதது, தேசிய கீதத்தை அவமதிக்கும் அப்பட்டமான செயலாகும். இதனால்தான் கடும் வேதனையுடன் ஆளுநர் சட்டசபையிலிருந்து வெளியேறினார்.


அரசியல் சாசனக் கடமைகளை நிறைவேற்றுவதிலும், தேசிய கீதத்திற்கு உரிய மரியாதை கிடைப்பதை உறுதி செய்யும் அதே நேரத்தில் தமிழின் பெருமையையும்  கட்டிக் காப்பதில் ஆளுநர் தவறியதில்லை என்பதை குறிப்பிட விரும்புகிறோம் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்