பயங்க கோவக்காரரா இருப்பாரு போலயே.. வாக்குச் சாவடி அதிகாரியை சரமாரியாக அடித்த சுயேச்சை!

Su.tha Arivalagan
Nov 13, 2024,05:06 PM IST

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்த சட்டசபை இடைத் தேர்தல் வாக்குப் பதிவின்போது சுயேச்சை வேட்பாளர் ஒருவர், வாக்குச் சாவடி அதிகாரியை சரமாரியாக அடித்து உதைத்தது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்தது.


ராஜஸ்தான் மாநிலத்தில்  7 சட்டசபைத் தொகுதிகளுக்கு இன்று இடைத் தேர்தல் நடந்தது. அதில் ஒரு தொகுதிதான் தியோலி யுனியாரா. இந்தத் தொகுதியில் நரேஷ் மீனா என்ற சுயேச்சை வேட்பாளரும் களத்தில் இருக்கிறார். சம்விரதா என்ற இடத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச் சாவடிக்கு நரேஷ் மீனா சென்றார். உள்ளே சென்ற அவர் அங்கு தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரி அமித் செளத்ரியுடன் கடுமையான வாக்குவாதம் புரிந்தார். 




வாக்குவாதம் முற்றிய நிலையில் திடீரென அமித் செளத்ரியை சரமாரியாக அடிக்க ஆரம்பித்தார். அமித் செளத்ரி வெளியில் ஓடி வந்து தப்பிக்க முயன்றும் கூட விடாமல் துரத்தி துரத்தி அடித்தார் நரேஷ் மீனா. இதனால் அந்த இடமே பரபரப்பானது. உடனடியாக போலீஸார் விரைந்து வந்து நரேஷ் மீனாவை மடக்கிப் பிடித்து நிறுத்தினர்.


சுயேச்சை வேட்பாளர் மீனா காங்கிரஸ் கட்சியில் இருந்தவர். இவருக்கு சீட் தராததால் கடுப்பான நரேஷ் மீனா சுயேச்சையாக போட்டியிடுகிறார். வாக்குச் சாவடி அதிகாரியை அடித்தது குறித்து நரேஷ் மீனா கூறுகையில், 3 பேரை வைத்து கள்ள ஓட்டு போட அனுமதித்துள்ளார். அதிகாரி அமித் செளத்ரி. அவருக்கு போலீஸாரும் உடந்தையாக இருந்தனர். இதனால்தான் அடித்தேன் என்று கூறினார் நரேஷ் மீனா.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்