ராஜாஜியின் கொள்ளுப் பேரன் சி.ஆர். கேசவன்.. காங்கிரஸை விட்டு விலகினார்!
Feb 23, 2023,12:49 PM IST
சென்னை: சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல் என்ற பெருமையைப் பெற்றவரான ராஜாஜியின் கொள்ளுப்பேரன் சி.ஆர். கேசவன், காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகியுள்ளார்.
கட்சி தற்போது போகும் பாதையில் தனக்கு உடன்பாடு இல்லை. இதனால் இனியும் அதில் நீடிப்பதில் விருப்பம் இல்லை என்று அவர் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
கடந்த 20 வருடமாக காங்கிரஸ் கட்சியில் நான் ஈடுபட்டு வந்தேன். ஆனால் கட்சி எதற்காக உருவாக்கப்பட்டதோ அந்த நோக்கத்திலிருந்து நழுவிச் செல்கிறது. கட்சி தற்போது போகும் பாதையில் தனக்கு உடன்பாடு இல்லை. எனவே இனியும் கட்சியில் நீடிக்க விரும்பவில்லை என்று கூறியுள்ளார் சி.ஆர். கேசவன்.
இந்த காரணத்தால்தான் தனக்கு சமீபத்தில் தேசிய அளவில் கட்சியில் பொறுப்பு அளிக்கப்பட்டபோதும் கூட அதை ஏற்கவில்லை என்றும் பாரத் ஜோடோ யாத்திரையிலும் பங்கேற்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
புதிய பாதையில் செல்ல முடிவெடுத்துள்ளேன். அதற்கு இதுவே சரியான தருணம் என்று உணர்வதால் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்ளிட்டவற்றிலிருந்து விலகுவதாக கேசவன் தனது கடிதத்தில் கூறியுள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அறக்கட்டளையிலிரும் ஒரு அறங்காவலராக இருந்து வந்தார் கேசவன். அதிலிருந்தும் தற்போது அவர் விலகியுள்ளார்.