இருக்கு... 7 நாட்களுக்கு தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில்.. மிதமான மழைக்கு வாய்ப்பிருக்கு!

Manjula Devi
Jul 04, 2024,08:33 PM IST

சென்னை: தமிழ்நாடு, புதுச்சேரி, மற்றும் காரைக்காலில் இன்று முதல் 7 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


தென்மேற்கு பருவமழை காரணமாக தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே மழை விட்டுவிட்டு பெய்து வருகிறது. இதனால் ஒருபுறம் குளுமையும் மறுபுறம் வெக்கையும் மாறி மாறி நிலவி மக்களை வாட்டி எடுத்து வருகிறது. குறிப்பாக சென்னையில் நேற்று பகலில் வெயில் வாட்டி எடுத்த நிலையில், இரவில் பலத்த காற்றுடன் கனமழை கொட்டி தீர்த்தது. இந்த மழை சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக நீடித்தது.


திடீரென பெய்த இந்த பெரு மழையால், சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இது தவிர சென்னை புறநகர் பகுதிகளிலும் பரவலாக கன மழை பெய்தது. இதன் எதிரொலியாக விமானங்கள் 20 நிமிடங்கள் தாமதமாக புறப்பட்டது. மேலும் சில விமானங்கள் தரையிறங்க முடியாமல் பெங்களூருக்கு திருப்பி விடப்பட்டன.




இந்த நிலையில் மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி ,மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 7 நாட்கள் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


இது தவிர சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்றும் பரவலாக மழை பெய்ய கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மீனவர்களுக்கான எச்சரிக்கை: 


இன்று முதல் வரும் ஏழாம் தேதி வரை தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் வங்கக் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்திலும், இடையே 55 km வேகத்தில் வீசக்கூடும். அதேபோல் அரபிக் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்திலும், இடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் யாரும் இப்பகுதி கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.