குடையோடு போங்க.. சென்னை உள்பட 6 மாவட்டங்களில்.. அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு!
சென்னை: தமிழ்நாட்டில் சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் அக்னி நட்சத்திரம் முடிந்தும் பல்வேறு இடங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னை உள்ளிட்ட வடகடலோர மாவட்டங்களிலும் வெயில் சுட்டெரித்து வந்தது. இதனால் மக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகினர். ஆனால் நேற்று சென்னை, தேனி, திருப்பூர், உள்ளிட்ட இடங்களில் மழை வெளுத்து வாங்கியது. தஞ்சையில் பெய்த கனமழையால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்கதிர்கள் முழுவதும் சேதமாகின.
திருப்பூர் மாவட்டம் அவிநாசி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. ஓசூரில் பலத்த காற்றுடன் மழை பெய்த நிலையில் தென்னை மரமே வேரோடு சாய்ந்து மின் கம்பம் விழுந்து சேதம் ஆனது. இதனால் வாகன ஓட்டிகள் சாலையில் செல்ல முடியாமல் சிரமம் ஏற்பட்டது.
நள்ளிரவில் சென்னையை நனைத்த மழை
சென்னையில், நள்ளிரவில் மழை வெளுத்து வாங்கியதால் மக்கள் ஆச்சரியமடைந்தனர். நங்கநல்லூர், தாம்பரம், சேலையூர், மேடவாக்கம், உள்ளிட்ட இடங்களில் நள்ளிரவில் கன மழை கொட்டி தீர்த்தது. இதேபோல் செங்கம், வாழப்பாடி, குளித்தலை உள்ளிட்ட இடங்களிலும் கோடை மழை வெளுத்து வாங்கியது. இப்படி தமிழ்நாட்டில் பரவலாக கோடை மழை பெய்து வெக்கை தணிந்து மக்களை மகிழ்வித்து வருகிறது.
அடுத்த 3 மணி நேரத்தில் மழை:
இந்த நிலையில் சென்னையில் கடந்த இரண்டு நாட்களாகவே வெயில் வாட்டிய எடுத்த நிலையில், இன்று சென்னை, திருவள்ளூர், ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் காரைக்கால் பகுதியில், அடுத்த மூன்று மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.