வேலூர் - ராணிப்பேட்டையிலிருந்து புறப்பட்டன மழை மேகங்கள்.. 2 மணி நேரத்தில் சென்னை நனையும்!

Su.tha Arivalagan
Jul 04, 2024,06:13 PM IST

சென்னை: வேலூர் ராணிப்பேட்டை பெல்ட்டிலிருந்து மழை மேகங்கள் சென்னையை நோக்கி நகர்வதாகவும், அடுத்த 2 மணி நேரத்தில் மழை சென்னையை வந்தடையும் என்றும் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.


சென்னை மற்றும் புறநகர்களில் நேற்று இரவு செமத்தியான மழை பெய்து மக்களை மகிழ்வித்தது. பலத்த காற்றுடன் கூடிய இந்த மழையானது, ஜூலை மாதத்தில் வழக்கமாக பெய்யும் மழையை விட அதிகமாகவே இருந்தது மக்களை மகிழ்வித்துள்ளது.




இந்த மாலை  அல்லது இரவு நேர மழையானது தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஒரு வாரத்துக்கு தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் பரவலாக மழை இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்றும் இரவு நேரத்தில் சென்னையில் மழை பெய்யும் என்று வெதர்மேன் பிரதீப்ஜான் தெரிவித்துள்ளார்.


இதுதொடர்பாக அவர் போட்டுள்ள எக்ஸ் பக்க பதிவில், மாலை நேரம் வந்தாச்சு.  காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, சென்னைக்கு மழை எப்படி இருக்கும் என்பதை கண்காணிக்கும் நேரம் இது. வேலூர் - ராணிப்பேட்டை பகுதியிலிருந்து இப்போதுதான் மேகக் கூட்டம் கிளம்பியுள்ளது. 2 மணி நேரத்தில் சென்னையை வந்தடையும்.


ஈரோடு - சேலம் நாமக்கல் பெல்ட்டிலும் மழை காணப்படுகிறது. இந்த மழையானது அப்படியே திருச்சி, கரூர், பெரம்பலூர் பக்கம் போகக் கூடும் என்று அவர் தெரிவித்துள்ளார்.


சென்னை வானிலை மைய அப்டேட்:



இதற்கிடையே,  இரவு 8.30 மணிக்குள் வேலூர், ராணிப்பேட்டை, நாமக்கல் மாவட்டங்களில் மிதமானது முதல் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. 


இதே காலகட்டத்தில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், கரூர், ஈரோடு, சேலம் மாவட்டங்களில் பரவலாக லேசானது முதல் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்று தெரிவித்துள்ளது.