தமிழகத்தில்.. 24ம் தேதி வரை.. கனமழை தொடரும்.. வானிலை மையம் அறிவிப்பு!

Manjula Devi
Jun 19, 2024,04:06 PM IST
சென்னை: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக வரும் 24 ஆம் தேதி வரை கனமழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களாக பரவலாக கனமழை பெய்து வருகிறது. இதனால் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வருகிறது. குறிப்பாக சென்னையில் நேற்று முன்தினம் கன மழை கொட்டி தீர்த்தது. இதனைத் தொடர்ந்து இரண்டாவது நாளான நேற்றும் இடியுடன் கூடிய பலத்த காற்றுடன் கனமழை வெளுத்து வாங்கியது.  சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பகலில் வெயிலில் தகித்த நிலையில் நேற்று இரவு 9 மணி அளவில் திடீரென கனமழை பெய்தது. இந்த மழை சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக நீடித்தது. கிண்டி, சைதாப்பேட்டை, கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், பட்டினப்பாக்கம், உள்ளிட்ட இடங்களில் பலத்த காற்றுடன் மழை வெளுத்து வாங்கியது. இதனால் சாலைகளில் தண்ணீர் தேங்கியது. வாகன ஓட்டிகள் சாலைகளில் செல்ல முடியாமல் சிரமத்திற்கு உள்ளாகினர். பல இடங்களில் மின் வெட்டும் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து ஒரு சில மணி நேரம் கழித்து மின் இணைப்பு சரி செய்யப்பட்டது.


இது தவிர சென்னையில் இரண்டாவது நாளாக சூறைக்காற்றுடன் கனமழை கொட்டி தீர்த்த நிலையில் கோழிக்கோட்டில் இருந்து 70 பயணிகளை ஏற்றி வந்த இண்டிகோ விமானம் தரை இறங்க முடியாமல் நீண்ட நேரம் வானில் வட்டமடித்தது.மேலும் 12 விமானங்கள் தரையிறங்க முடியாமலும்,14 விமானங்கள் புறப்படுவதிலும் தாமதம் ஏற்பட்டது. நீண்ட நேரத்திற்கு பிறகு கோழிக்கோடு விமானம் திருச்சிக்கும், டெல்லி விமானம் பெங்களூருக்கும்  திருப்பி விடப்பட்டன.

இந்த நிலையில் தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நீடித்து வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பரவலாக வரும் ஜூன் 24ஆம் தேதி வரை கனமழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

மேலும் தென் இந்தியாவில் ஜூன் ஒன்றாம் தேதி முதல் ஜூன் 18ஆம் தேதி வரை இயல்பை விட அதிகமாக 16 சதவீதம் மழை பெய்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

சென்னையில் அதிகபட்சமாக நேற்று திருவொற்றியூரில் 85 மி.மீ மழை பதிவானது. அமைந்த கரையில் 65 மி.மீ மற்றும் தேனாம்பேட்டையில் 62 மி.மீ மழையும் பெய்துள்ளது .