சட்டென்று மாறிய வானிலை.. எங்கெங்கும் பூ மழை.. தமிழகத்தில் 23ஆம் தேதி வரை.. மழை பெய்யுமாம்!

Manjula Devi
Jun 18, 2024,12:19 PM IST

சென்னை:  தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் 23ஆம் தேதி வரை மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.


தென்கிழக்கு அரபிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய கேரள கடலோர பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழ்நாடு முழுவதும் பரவலாக ஒரு சில இடங்களில் காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் எனவும், சென்னை உள்ளிட்ட வடகடலோர மாவட்டங்களில் மழை பெய்யும் கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தது. 




இந்த நிலையில் நேற்று மதுரை, ஓசூர், கடலூர், குடியாத்தம், உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பரவலாக பலத்த காற்றுடன் கனமழை மழை கொட்டி தீர்த்தது .குறிப்பாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெரும்பாலான இடங்களிலும் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக காற்றுடன் கூடிய கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் பல்வேறு பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு விமான சேவையும் கடுமையாக பாதிக்கப்பட்டது.கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சென்னை பூந்தமல்லியில் 11 செமீ மழை பெய்துள்ளது.


தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, வெப்ப சலனம்  மற்றும் கேரளாவில் தென்மேற்கு பருவ மழை நீடித்து வரும் காரணத்தால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் 23ஆம் தேதி வரை இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.


குறிப்பாக சென்னையில் மாலை மற்றும் இரவு நேரங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது பெய்யும் கன மழையுடன் பலத்த காற்றும் வீசி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.