தமிழ்நாட்டிற்கு.. இன்று ஆரஞ்சு எச்சரிக்கை.. மிக கனமழை பெய்ய வாய்ப்பு.. இந்திய வானிலை ஆய்வு மையம்

Manjula Devi
Jul 18, 2024,11:02 AM IST

சென்னை:   மத்திய  வங்கக்கடல் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதால், தமிழ்நாட்டில் இன்று ஒரு சில இடங்களில் மிக கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 


அதேபோல் கர்நாடகாவில் அதீத கன மழை பெய்வதற்கான ரெட் அலர்ட் எச்சரிக்கையும், கேரளாவில் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையும் விடுத்துள்ளது.




தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே ஒரு சில இடங்களில் கன முதல் மிக கனமழை வரை கொட்டி தீர்த்து வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள  பகுதிகளான நீலகிரி, கோவை மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் பரவலாக அதீத கன மழை வரை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. பல இடங்களில் மரம் முறிந்து விழுந்து போக்குவரத்திற்கு பாதிப்பு ஏற்பட்டது. இதனால் பள்ளிக்கு செல்லும் மாணவிகள், பணிக்குச் செல்வோர் என கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.


நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் மூன்றாவது நாளாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதேபோல் கோவை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக வால்பாறை பள்ளிக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.


இது தவிர மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள கேரளா மற்றும் கர்நாடகாவிலும் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் பல்வேறு பகுதிகளில் இருந்து நீர்வரத்து அதிகரிப்பதால் அணைகளின் நீர்மட்டம்  உயர்ந்து வருகிறது. மேலும் ஒகேனக்கல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் மூன்றாவது நாளாக சுற்றுலாப் பயணிகள் குளிக்கவும், செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.


இந்த நிலையில் மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்க கடல் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாவு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாம். இதனால் இன்று தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் மிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. அப்போது 12 முதல் 20 சென்டிமீட்டர் வரை மிக மழை பெய்வதற்கான  ஆரஞ்சு நிற எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால், பகுதிகளில் இன்று முதல் ஏழு நாட்கள் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 


அதேபோல் கர்நாடகாவில் இன்று ஒரு சில இடங்களில் 21 செமீட்டருக்கும் அதிகமாக அதீத மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் இன்று கர்நாடகாவிற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கையும், கேரளாவிலும் ஒரு சில இடங்களில் 12 முதல் 20 சென்டிமீட்டர் வரையிலான மிக கனமழை பெய்வதற்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.


நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் கடந்த 24 மணி நேரத்தில் 20.4 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது. எமரால்டில் 12 புள்ளி 3 சென்டிமீட்டர், அப்பர் பவானியில் 10.6 சென்டிமீட்டர், பந்தலூரில் 8.4 சென்டிமீட்டர், சேரன் கோட்டில் 8.3 cm மழையும் பதிவாகியுள்ளது. கூடலூரில் 7 சென்டிமீட்டர், தேவலாவில் 6.8 சென்டிமீட்டர், நடுவத்தத்தில் 6.3 சென்டிமீட்டர் ஒவேலியில் 6.2 சென்டிமீட்டர் செருமுள்ளியில் 5.6 செமீ மழையும் பதிவாகியுள்ளது.