தமிழ்நாட்டில்.. 12 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு
சென்னை: திருநெல்வேலி, கன்னியாகுமரி,தூத்துக்குடி, ராமநாதபுரம் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் லேசானது முதல் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் தொடங்கியதில் இருந்து தமிழகம்,புதுவை உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. வடகிழக்கு பருவ மழையின் தீவிரம் இதுவரை இல்லாத அளவிற்கு இந்தாண்டு தான் தீவிரமாக இருந்துள்ளது. மழையின் தீவிரம் அதிகம் என்பதால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் சென்னை வானிலை மையம் இன்று வெளியிட்ட அறிவிப்பில், கடலூர், அரியலூர், பெரம்பலூர், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருச்சி, ராமநாதபுரம், சிவகங்கை, கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
முன்னதாக வெளியிட்டிருந்த வானிலை முன்னெச்சரிக்கை அறிவிப்பில், திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் சில இடங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என்றும், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் தென்காசி மாவட்டங்களில் சில இடங்களில் நாளை கன மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இன்று முதல் 11ம் தேதி வரை தென்தமிழக கடலோரப் பகுதிகள் மன்னார் வளைகுடா மற்றும் குமரி கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசப்படும் எனவே மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.