வட தமிழ்நாட்டின் உட்புற மாவட்டங்களில்.. 2 நாட்களுக்கு வெப்ப அலை வீசும்.. தகிக்கிறது ஈரோடு!
May 04, 2024,09:50 PM IST
சென்னை: தமிழ்நாட்டின் வட உட்புற மாவட்டங்களில் இன்றும் நாளையும் வெப்ப அலை வீசும் என்றும், 7 மற்றும் 8ம் தேதிகளில் தமிழ்நாட்டில் பரவலாக சில மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை வரை பெய்யக் கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் வெயில் நிலவரம் மற்றும் மழைக்கான வாய்ப்பு குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை உள் மாவட்டங்களில் சமவெளிப் பகுதிகளில் அனேக இடங்களில் பொதுவாக இயல்பை விட இரண்டு முதல் நான்கு டிகிரி செல்சியஸ் வரை மிக அதிகமாக இருந்தது. வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இயல்பை விட மிக மிக அதிகமாக இருந்தது. புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை பொதுவாக இயல்பை ஒட்டி இருந்தது.
ஈரோட்டில் 110 டிகிரி பாரன்ஹீட் வெப்ப நிலை
வட தமிழக உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் வெப்ப அலை வீசி உள்ளது. அதிகபட்சமாக ஈரோட்டில் 44.4 டிகிரி செல்சியஸ் (110 டிகிரி பாரன்ஹீட்) வெப்பநிலை பதிவாகியுள்ளது. இது இயல்பை விட 5.3 டிகிரி செல்சியஸ் அதிகமாகும். தமிழகத்தில் ஐந்து இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 42 - 43 செல்சியஸ் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக கரூர் பரமத்தியில் 42.5 (108.5) வேலூரில் 42.5 (108.5) திருத்தணியில் 42.5 (108.5), மதுரை நகரம் 41.2 (106.16) திருச்சி 40.7 (105.26), சேலம் 40.5 (104.9) தர்மபுரி 40.2 (104.36), பாளையங்கோட்டை 40.2 (104.36) மதுரை விமான நிலையம் 40.1 (104.18) பதிவாகியுள்ளது.
புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 36 - முதல் 38 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. சென்னையை பொருத்தவரை மீனம்பாக்கத்தில் 40.2 செல்சியஸ் வெப்பநிலையும் நுங்கம்பாக்கத்தில் 38.1 செல்சியஸ் வெப்பநிலையும் பதிவாகியுள்ளது.
7 மற்றும் 8ம் தேதிகளில் மழைக்கு வாய்ப்பு
தமிழ்நாடு புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் நாளை மற்றும் நாளை மறுநாள் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏழாம் தேதி தமிழகத்தில் சில இடங்களிலும் புதுச்சேரி காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். குறிப்பாக, தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு, சேலம், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஒரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
எட்டாம் தேதி கோயம்புத்தூர், நீலகிரி, தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மாவட்டம் மலைப்பகுதியில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.