11 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!

Meenakshi
Oct 28, 2024,05:21 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் இன்று 11 மாவட்டங்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் மற்றும் வளிமண்டல காற்றின் சுழற்சி காரணமாக கடந்த சில நாட்களாக தமிழக முழுவதும் பரவலாக மிதமான மற்றும் கனமழை பெய்து வருகிறது. இந்த பருவ மழையினால் பொது மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மிக கனமழை பெய்து குடியிருப்புகள் முழுவதும் வெள்ளநீர் சூழ்ந்தது. இதனால் மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். அப்பகுதிகளில் மீட்பு பணிகளை அரசு மேற்கொண்டு வருகிறது. 




இந்நிலையில், தென்னிந்திய கடலோரப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டலம் மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று  தமிழகத்தில் இடி மின்னலுடன் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், பெரம்பலூர், அரியலூர் மற்றும் திருச்சி ஆகிய 11 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.


மேலும், அக்டோபர் 29,30,31 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.


நவம்பர் 1ம் தேதி தமிழத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி,மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், சேலம், திருவண்ணாமலை, நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. நவம்பர் 2 மற்றும் 3ம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்