என்னுடைய வெள்ளை டி ஷர்ட் ரகசியம் இது தான்... கூடவே பரிசையும் அறிவித்த ராகுல் காந்தி
டில்லி : காங்கிரஸ் தலைவரும், எம்.பி.,யுமான ராகுல் காந்தி, தான் ஏன் எப்போதும் வெள்ளை டி ஷர்ட் மட்டுமே அணிகிறேன் என்ற ரகசியத்தை வெளியிட்டுள்ளார். அதோடு, மற்றவர்களுக்கும் வெள்ளை டி ஷர்ட் பரிசளிக்க போவதாக அவர் அறிவித்துள்ளார்.
ராகுல் காந்தி, நேற்று தன்னுடைய 54வது பிறந்த நாளை கொண்டாடினார். அவருக்கு காங்கிரஸ் தலைவர்கள் மட்டுமின்றி அரசியல் கட்சி தலைவர்கள், தொண்டர்கள் என பலரும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்திருந்தனர். பிரியங்கா காந்தியும் தனது சகோதரர் ராகுல் காந்தியை புகழ்ந்து எக்ஸ் தள பக்கத்தில் பிறந்த நாள் வாழ்த்து பதிவிட்டிருந்தார்.
பிறந்தநாளை முன்னிட்டு தனது சகோதரி பிரியங்கா காந்தியுடன், டில்லியில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்திற்கு சென்றார். அங்கு கட்சி நிர்வாகிகளுடன் கேக் வெட்டி, தனது பிறந்த நாளை கொண்டாடினார். பிறந்தநாள் கொண்டாடிய கையோடு, தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் போஸ்ட் ஒன்றும் போட்டுள்ளார்.
அதில், எனக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் என்னுடைய நெஞ்சார்ந்த நன்றி. நீங்கள் ஏன் எப்போதும் வெள்ளை நிற டி ஷர்ட்டே அணிகிறீர்கள் என பலரும் என்னிடம் அடிக்கடி கேட்கிறார்கள். இந்த டி ஷர்ட் வெளிப்படை தன்மை, திடத்தன்மை மற்றும் எளிமையின் அடையாளமாக இருக்கிறது. அதனால் தான் இதை அணிகிறேன். அதே போன்ற மதிப்புக்கள் உங்களுடைய வாழ்க்கையில் எப்போது, எப்படி உதவி உள்ளது என்பது பற்றி #WhiteTshirtArmy என்ற ஹேஷ்டேக் பயன்படுத்தி வீடியோவாக என்னிடம் சொல்லுங்கள். நான் உங்களுக்கு வெள்ளை டி ஷர்ட் பரிசாக வழங்குகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
1970ம் ஆண்டு பிறந்த ராகுல் காந்தி, தொடர்ந்து 5வது முறையாக லோக்சபா எம்.பி.,யாக இருந்து வருகிறார். 2004ம் ஆண்டு அரசியலில் அடியெடுத்து வைத்த ராகுல் காந்தி, முதல் முறையாக தனது தந்தை ராஜீவ் காந்தியின் தொகுதியான உ.பி.,யின் அமேதி தொகுதியில் இருந்து எம்.பி.,யாக தேர்வு செய்யப்பட்டார். 2007ம் ஆண்டு செப்டம்பர் மாதம் கட்சியின் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.
சமீபத்தில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் வயநாடு மற்றும் ரேபரேலி தொகுதிகளில் போட்டியிட்டு, இரண்டிலும் அமோக வெற்றி பெற்றார். இவ்வார துவக்கத்தில் கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே வெளியிட்ட அறிவிப்பில், ராகுல் காந்தி, வயநாடு தொகுதி எம்.பி., பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக தெரிவித்தார். வயநாடு தொகுதியில் நடக்க உள்ள லோக்சபா இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் பிரியங்கா காந்தி நிறுத்தப்பட உள்ளதாகவும், இது இவரது முதல் தேர்தல் என்றும் சொல்லப்படுகிறது.