டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குடும்பத்தை.. இன்று நேரில் சந்திக்கிறார்.. ராகுல் காந்தி
டெல்லி: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று இரவு கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, இன்று அவருடைய குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவிக்க உள்ளார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி.
டெல்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில், 2021 ஆம் ஆண்டுக்கான புதிய மதுபான கொள்கையை வகுக்கப்பட்டது. இந்த புதிய மதுபானக் கொள்கையின் அடிப்படையில் பல கோடி லட்சம் பணம் கைமாறியதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது அமலாக்கதுறையினர் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த எம்பி சஞ்சய் சிங், விஜய் நாயர், பி ஆர் எஸ் தலைவர் கவிதா ஆகியோர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர். இதனைத் தொடர்ந்து இந்த வழக்கு விசாரணைக்காக ஆஜராகும் படி முதல்வர் அரவிந்த் கெஜ்வாலுக்கு ஒன்பது முறை சம்மன் அனுப்பப்பட்டு வந்தது. ஆனால் இதுவரை அவர் ஒரு முறை கூட ஆஜராகவில்லை. சமீபத்தில் உச்ச நீதிமன்றத்தை நாடிய கெஜ்ரிவால் தான் ஆஜரானால் தன்னை கைது செய்யக்கூடாது என்ற நிபந்தனையில் மனு அளித்தார். ஆனால் இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அப்போது ஏப்ரல் 22 ஆம் தேதி ஆஜராகும்படி கெஜ்ரிவாலுக்கு உத்தரவிட்டிருந்தது நீதிமன்றம்.
இந்த நிலையில் நேற்று வாரன்ட்டுடன், 12 பேர் கொண்ட அமலாக்க துறை குழுவினர் கெஜ்ரிவால் வீட்டிற்கு சென்று சோதனை நடத்தினர். இந்த சோதனை சுமார் 2 மணி நேரம் நீடித்தது. இதனைத் தொடர்ந்து கெஜ்ரிவாலின் லேப்டாபிலிருந்து பல்வேறு ஆதாரங்கள் திரட்டப்பட்டதாக கூறப்பட்டது. இதனை அடுத்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார்.
கெஜ்ரிவால் கைதுக்கு பல்வேறு தலைவர்கள் பல்வேறு மாநில முதல்வர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் கெஜ்ரிவால் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிக்க இன்று நேரில் சந்திக்க இருக்கிறார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி. முன்னதாக அவரது குடும்பத்தினரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறினார். காங்கிரஸ் சார்பில் கெஜ்ரிவால் குடும்பத்தினருக்கு சட்ட உதவிகள் செய்ய தயாராக இருப்பதாகவும் அறிவித்துள்ளார்.
தலைவர்கள் கண்டனம்:
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து கேரள முதல்வர் பினராயி விஜயன், தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
144 தடை சட்டம்:
அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்யப்பட்டதை தொடர்ந்து,டெல்லி அரசு அவரது வீட்டைச் சுற்றி 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. கெஜ்ரிவால் வீட்டு முன்பு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.இது தவிர அமலாக்கத்துறை அலுவலகத்தைச் சுற்றி பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
போராட்டம்:
டெல்லி முதல்வர் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து ஆம் ஆத்மி கட்சியினர் போராட்டம் நடத்த இந்தியா கூட்டணி கட்சிகளுக்கு அழைப்பு விடுத்து வருகின்றனர். இதனால் டெல்லி முழுவதும் கூடுதல் படைகளை குவித்துள்ளது மத்திய அரசு.