நம்பிக்கை இல்லா தீர்மானம்.. ராகுல் காந்தி பேசலை.. ஏன் என்னாச்சு?
Aug 08, 2023,01:11 PM IST
டெல்லி: லோக்சபாவில் இன்று பிரதமர் நரேந்திர மோடி அரசு மீதான நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின் மீது விவாதம் தொடங்கியுள்ளது. முதலில் ராகுல் காந்தி பேசுவார் என்று கூறப்பட்டிருந்த நிலையில் காங்கிரஸ் எம்.பியும், தீர்மானத்தைக் கொண்டு வந்தவருமான கெளரவ் கோகோய் முதலில் பேசினார்.
மணிப்பூர் விவகாரம் தொடர்பாக மத்திய அரசு மீது எதிர்க்கட்சிகள் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வந்துள்ளன. பிரதமர் நரேந்திர மோடியை சபையில் பேச வைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இது கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்த விவாதம் இன்று காலை தொடங்கவிருந்த நிலையில் அமளி துமளி ஏற்பட்டதால் 12 மணிக்கு சபை ஒத்திவைக்கப்பட்டு பின்னர் கூடியபோது விவாதம் தொடங்கியது. காங்கிரஸ் தரப்பிலிருந்து ராகுல் காந்தி முதலில் பேசுவார் என்று கூறப்பட்டிருந்தது. ஆனால் அவர் பேசவில்லை. மாறாக கெளரவ் கோகோய்தான் விவாதத்தைத் தொடங்கி வைத்தார்.
கெளரவ் கோகோய்தான் தீர்மானத்தைக் கொண்டு வந்தவர். ராகுல் காந்தி பேசுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கோகோய் பேசுவது வியப்பைக் கொடுத்துள்ளது. இருப்பினும் காங்கிரஸ் தரப்பில் கடைசியாக பேச ராகுல் காந்தி திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது.
இந்த விவாதத்தில் மத்திய அரசு தரப்பில் 5 அமைச்சர்கள் விவாதத்தின் மீது பேசுவார்கள். அமித்ஷா, நிர்மலா சீதாராமன், ஜோதிராதித்யா சிந்தியா, கிரண் ரிஜ்ஜு, ஸ்மிருதி இராணி ஆகியோரே அவர்கள். இவர்கள் தவிர மேலும் 5 பாஜக எம்.பிக்களும் பேசவுள்ளனர். இன்றும் நாளையும் விவாதம் நடைபெறும். வியாழக்கிழமையும் இது தொடரும் வாய்ப்புள்ளது. அதன் பிறகுதான் வாக்கெடுப்பு நடைபெறும். விவாதம் முடிந்த பிறகு பிரதமர் பதில் உரைப்பார். அதன் பின்னர் வாக்கெடுப்பு நடைபெறும்.
முன்னதாக இன்று காலை பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாஜக எம்.பிக்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் பாஜக தலைவர் ஜே.பி. நட்டா, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் விவாதத்தின்போது எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து முக்கியமாக விவாதிக்கப்பட்டது.
கடந்த ஜூலை 20ம் தேதி நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் கூடின. ஆனால் அது முதல் தினசரி எதிர்க்கட்சிகள் மணிப்பூர் விவகாரம் தொடர்பாக தொடர்ந்து அமளி துமளியில் ஈடுபட்டு வருகின்றன. அதைப் பொருட்படுத்தாமல் அரசு தொடர்ந்து மசோதாக்களை தாக்கல் செய்து நிறைவேற்றியும் வருகிறது. இதுவும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வந்த பிறகு மசோதாக்கள் தாக்கல் செய்யக் கூடாது என்பது மரபு. ஆனால் அதை மத்திய அரசு பொருட்படுத்தவில்லை, மரபுகளை மீறி வருகிறது என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. டெல்லி சட்ட மசோதா அதில் முக்கியமானது.