அவதூறு வழக்கில் 2 ஆண்டு சிறை.. தண்டனையை எதிர்த்து ராகுல் காந்தி அப்பீல்!
Apr 02, 2023,02:18 PM IST
புதுடில்லி : அவதூறு வழக்கில் தனக்கு சூரத் கோர்ட் விதித்த 2 ஆண்டுகள் சிறை தண்டனையை எதிர்த்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சூரத் மாவட்ட முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.
2019 ம் ஆண்டு லோக்சபா தேர்தல் பிரசாரத்தின் போது, "திருடர்கள் அனைவரும் மோடி என்ற பெயரிலேயே இருக்கிறார்கள்" என ராகுல் காந்தி பேசினார். இதனை எதிர்த்து பாஜக எம்எல்ஏ.,வும், குஜராத் முன்னாள் அமைச்சருமான பூர்னேஷ் மோடி என்பவர் சூரத் கோர்ட்டில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். மோடி என்பது தனி நபரின் பெயர் அல்ல. அது ஒரு சமூகத்தின் பெயர் என பூர்னேஷ் தரப்பில் வாதிடப்பட்டது.
இந்த அவதூறு வழக்கில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு சமீபத்தில் சூரத் கோர்ட் தீர்ப்பு வழங்கியது. இதில், ராகுல் காந்தியை குற்றவாளி என அறிவித்த சூரத் கோர்ட். அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தது. அதே சமயம் தண்டனையை 30 நாட்களுக்கு பிறகே நிறைவேற்ற முடியும் என கூறி மேல்முறையீடு செய்வதற்கு ராகுலுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் உள்ளிட்ட பலரும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இதற்கிடையில் ராகுலுக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதால் லோக்சபா செயலகம் அவரை தகுதி நீக்கம் செய்தது. இதனால் வயநாடு தொகுதி எம்.பி.,யாக இருக்கும் ராகுல் காந்தியின் எம்பி பதவி பறிக்கப்பட்டது. இரண்டு ஆண்டுகள் தண்டனை பெற்றதால் அடுத்த எட்டு ஆண்டுகளுக்கு ராகுல் தேர்தலில் போட்டியிட முடியாத நிலை உருவானது. இதனால் காங்கிரசின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என அனைவரும் ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர்.
இந்நிலையில் தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து ராகுல் காந்தி இன்று மேல்முறையீடு செய்துள்ளார்.