மணிப்பூரில் பாரத மாதாவை கொன்று விட்டீர்கள்.. ராகுல் காந்தி ஆவேசம்

Su.tha Arivalagan
Aug 09, 2023,12:38 PM IST
டெல்லி: லோக்சபாவில் இன்று நம்பிக்கை இல்லாத் தீர்மானம் மீதான பேச்சைத் தொடங்கிய ராகுல் காந்தி, அதானி குறித்து இன்று பேச மாட்டேன்.. பாஜகவினர் அஞ்ச வேண்டாம் என்று கூறியதால் பாஜக உறுப்பினர்கள் ஆவேசமடைந்து கோஷமிட்டனர்.

பிரதமர் நரேந்திர மோடி அரசு மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் மீது நேற்று விவாதம் தொடங்கியது. மொத்தம் 12 மணி நேரம் விவாதம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

நேற்று ராகுல் காந்தி விவாதத்தைத் தொடங்கி முதலில் பேசுவார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் ராகுல் காந்தி நேற்று பேசவில்லை. மாறாக, தீர்மானத்தை கொண்டு வந்த காங்கிரஸ் இளம் எம்பி கெளரவ் கோகோய் பேசினார். இந்த நிலையில் இன்று ராகுல் காந்தி பேசினார்.

இன்று பிற்பகல் 12 மணிக்கு 2வது நாள் விவாதம் தொடங்கியபோது முதல் உரையாக ராகுல் காந்தியின் பேச்சு இருந்தது. ராகுல் காந்தியின் பேச்சிலிருந்து சில துளிகள்:

சபாநாயகர் அவர்களே எனது எம்பி பதவியை மீண்டும் வழங்கியமைக்காக உங்களுக்கு முதலில் நன்றி கூறிக் கொள்கிறேன்.

கடந்த முறை நான் பேசியபோது அதானி பற்றிப் பேசியதால் உங்களுக்கு  (பாஜக எம்பிக்கள்) தர்மசங்கடம் ஏற்படுத்தி விட்டேன். உங்களது மூத்த தலைவர் மன வலியைச்சந்தித்தார��.அது உங்கள் மீதும் கூட தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் என்று கருதுகிறேன். அதற்காக வருத்தப்படுகிறேன். ஆனால் நான் உண்மையைத்தான் பேசினேன்.

பயப்படாதீர்கள், இன்று நான் அதானி பற்றிப் பேசப் போவதில்லை. எனவே அவர்கள் அச்சப்படத் தேவையில்லை.

வழக்கமாக நான் அரசைத் தாக்கிப் பேசுவேன்.. இன்று அப்படிப் பேசப் போவதில்லை. இதயத்திலிருந்து பேசப் போகிறேன். மணிப்பூர் குறித்துப் பேசப் போகிறேன்.. அரசைப் பற்றியோ, அதானி பற்றியோ பேசப் போவதில்லை. மணிப்பூர் இன்று இரண்டாக உடைந்து போயிருக்கிறது அதை உடைத்து விட்டார்கள். நான் கலவரம் பாதித்த பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்டேன். மணிப்பூர் மக்களை இந்த அரசு கைவிட்டு விட்டது. பிரதமர் கைவிட்டு விட்டார்.  பிரதமர் மோடி அங்கு இதுவரை போகவில்லை

மணிப்பூரில் இந்தியாவை கொன்று விட்டனர்.  இந்தியாவை மணிப்பூரில் படுகொலை செய்து விட்டனர். பாரத மாதாவைக் கொலை செய்து விட்டனர். மணிப்பூரில் நான் ஒரு முகாமில் பெண் ஒருவரை சந்தித்தபோது, என்ன நடந்தது என்று கேட்டேன்.  தனது ஒரே மகனை தன் கண் முன்பாகவே சுட்டுக் கொன்று விட்டதாக அவர் கூறினார்.  கொல்லப்பட்ட தனது மகனின் இறந்த உடலுக்கு அருகே படுத்தபடி அன்று இரவு முழுவதையும் கழித்துள்ளார் அந்தப் பெண்.  நீங்கள் பாரத மாதாவைக் காப்பவர்கள் அல்ல, பாரத மாதாவைக் கொன்றவர்கள். தேச துரோகிகள் என்று ஆவேசமாக பேசி தனது பேச்சை முடித்தார் ராகுல் காந்தி.