நாடாளுமன்றம் செல்ல அனுமதிங்க.. சுப்ரீம் கோர்ட்டில் ராகுல் காந்தி முறையீடு

Aadmika
Aug 03, 2023,12:30 PM IST
டெல்லி : தனக்கு விதிக்கப்பட்ட இரண்டு ஆண்டு சிறை தண்டனைக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்றும், தன்னை நாடாளுமன்றம் செல்வதற்கு அனுமதிக்க வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட்டில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மனு செய்துள்ளார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீது பாஜக பிரமுகர் தொடர்ந்த அவதூறு வழக்கில் அவருக்கும் சூரத் கோர்ட் இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதித்தது. இதனால் ராகுல் காந்தியில் லோக்சபா எம்.பி., பதவி பறிக்கப்பட்டதுடன், அவர் நான்கு ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தனக்க விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து அவர் தொடர்ந்து அடுத்தடுத்து மேல்முறையீடு செய்து வருகிறார்.

தனக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனைக்கு தடை விதிக்கக் கோரிய ராகுல் காந்தியின் மனுவை குஜராத் ஐகோர்ட் தள்ளுபடி செய்தது. இதனையடுத்து தற்போது சுப்ரீம் கோர்ட்டில் அவர் மேல்முறையீடு செய்துள்ளார். அதோடு தற்போது நடந்து வரும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் பங்கேற்க தனக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்றும் கேட்டுள்ளார். 



ராகுல் காந்தி சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், நான் குற்றம் ஏதும் செய்யவில்லை. அதனால் இந்த தண்டனை நியாயமற்றது. என்னுடைய பேச்சிற்காக நான் ஏற்கனவே மன்னிப்பு கேட்டு விட்டேன். மீண்டும் மன்னிப்பு கேட்கவும் தயாராக உள்ளேன் என குறிப்பிட்டுள்ளார். 

2019 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கர்நாடகா மாநிலம் கோலார் பகுதியில் தேர்தல் பிரசார கூட்டம் ஒன்றில் பேசிய ராகுல் காந்தி, திருடர்கள் அனைவரும் மோடி என்ற அடைமொழியுடனேயே இருக்கிறார்கள் என பேசியிருந்தார். இதற்காக குஜராத் பாஜக எம்எல்ஏ பர்னீஷ் இஷ்வார்பாய் மோடி, ராகுல் காந்தி மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார். 2019 ம் ஆண்டு தொடரப்பட்ட இந்த வழக்கில் சூரத் கோர்ட் சமீபத்தில் அதிரடி தீர்ப்பு வழங்கியது குறிப்பிடத்தக்கது. இதனால் இழந்த தனது எம்பி., பதவியை மீண்டும் பெறுவதற்காக ராகுல் காந்தி தீவிரமாக போராடி வருகிறார்.

தற்போது மோடி அரசு மீது எதிர்க்கட்சிகள் நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தைக் கொண்டு வந்துள்ளன. அதன் மீது விவாதம்  நடைபெறவுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி பதிலளித்துப் பேசவுள்ளார். இந்த விவாதத்தில் எப்படியாவது ராகுல் காந்தி கலந்து கொள்ள வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் மும்முரமாக உள்ளன. ராகுல் காந்தி மட்டும் லோக்சபாவில் பேசினால் நிச்சயம் பாஜகவை கிழித்து தொங்க விட்டு விடுவார், அக்கட்சிக்கு கடும் நெருக்கடியைக் கொடுப்பார் என்று அவை எதிர்பார்க்கின்றன. ஆனால் விவாதத்தில் பங்கேற்க ராகுல் காந்திக்கு அனுமதி கிடைக்குமா என்பதுதான் சந்தேகமாக உள்ளது.