கேதார்நாத்தில் வைத்து.. தம்பி வருண் காந்தியை சந்தித்தார் ராகுல் காந்தி

Su.tha Arivalagan
Nov 08, 2023,01:39 PM IST

டெல்லி: பாஜக எம் பி யும் தனது சித்தப்பா சஞ்சய் காந்தியின் மகனுமான வருண் காந்தியை கேதார்நாத்தில் வைத்து சந்தித்துள்ளார் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி.


இந்திரா காந்தி குடும்பத்தைச் சேர்ந்த வருன் காந்தி பாஜகவில் இணைந்து அதில் எம்பியாக வலம் வருகிறார். இவரது தாயார் மேனகா காந்தியும் எம்பியாக இருக்கிறார். முன்னாள் மத்திய அமைச்சர்தான் மேனகா காந்தி. அவரும் பாஜகவை சேர்ந்தவரே.


சஞ்சய் காந்தியின் மனைவியான மேனகா காந்திக்கும் ராகுல் ராஜீவ் காந்தியின் மனைவியான சோனியா காந்திக்கும் இடையே பேச்சு வார்த்தை கிடையாது. இரு குடும்பங்களும் நீண்ட காலமாக பேசிக்கொள்வது கிடையாது. இந்த நிலையில் ராகுல் காந்தியும் வருண் காந்தியும் கேதார்நாத்தில் வைத்து சந்தித்துள்ளனர்.




கேதார்நாத் கோவிலுக்கு வந்த இடத்தில் இருவரும் சந்தித்துள்ளனர். பாஜகவில் எம்பியாக இருக்கும் வருண் காந்தி சமீப காலமாக கட்சித் தலைமையுடன் மோதல் போக்கில் ஈடுபட்டு வருகிறார். கட்சியின் செயல்பாடுகளையும் பல்வேறு நிகழ்வுகளையும் அவர் தொடர்ந்து விமர்சித்து வருகிறார். இது பாஜகவுக்குள் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் தனது அண்ணனான ராகுல் காந்தியை வருண் காந்தி சந்தித்து பேசி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


இந்த சந்திப்பு எதற்காக என்பது தெரியவில்லை. இருப்பினும் வருண் காந்தி பாஜகவில் இருந்து விலகி காங்கிரசுக்கு திரும்புவாரா என்ற எதிர்பார்ப்பை இது ஏற்படுத்தி உள்ளது. ஒருவேளை வருண் காந்தி பாஜகவில் இருந்து விலகி காங்கிரசுக்கு போனால் அவரைப் பின்பற்றி அவரது தாயாரும் காங்கிரசுக்கு வருவாரா என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. 


பாஜகவுக்கு எதிரான சக்திகளை ஒன்று திரட்டும் முயற்சியில் ராகுல் காந்தி தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். பல்வேறு எதிர்க்கட்சிகளையும் இணைத்து இந்தியா என்ற கூட்டணியும் உருவாகியுள்ளது. இந்த கூட்டணி நாளுக்கு நாள் வலுவடைந்து வரும் நிலையில் பாஜகவின் முகாமிலிருந்து இந்திராகாந்தி குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் வரும்போது அது பாஜகவுக்கு பெரிய பின்னடைவாக கருதப்படும். என்ன நடக்கிறது என்பது பொறுத்திருந்து பார்க்கப்பட வேண்டும்.


இந்த சந்திப்பு குறித்து ராகுல் காந்திக்கு கூறுகையில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. வருண் காந்தியின் மகளை சந்தித்தேன். மிகவும் மகிழ்ச்சி என்று கூறினார்.  கடந்த ஆண்டு நடந்த ஒரு செய்தியாளர் சந்திப்பின்போது வருண் காந்தி காங்கிரசுக்கு வந்தால் வரவேற்கப்படுவாரா என்று ராகுல் காந்தியிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த ராகுல் காந்தி யார் வேண்டுமானாலும் காங்கிரஸுக்கு வரலாம். ஆனால் வருண் காந்தி ஆர்எஸ்எஸ் - பாஜகவின் கொள்கையை ஏற்றுக் கொண்டிருக்கிறார் என்று தெரிவித்திருந்தார்.


இந்த நிலையில் தற்போது நடந்துள்ள இந்த கேதார்நாத் சந்திப்பு வருண் காந்தி ராகுல் காந்தியுடன் முடிவடையுமா அல்லது வருண் காந்தியை குடும்பத்தோடு காங்கிரஸ் பக்கம் இழுத்து வருமா என்பது பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.