காங்கிரஸை தூக்கி விட்ட கேரளா.. வயநாடுடன் செட்டிலாவாரா ராகுல் காந்தி.. அப்ப ரேபரேலி யாருக்கு?

Su.tha Arivalagan
Jun 06, 2024,05:33 PM IST

டெல்லி:  கேரளாவில் காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் அபரிமிதமான ஆதரவைத் தெரிவித்திருப்பதாலும், வயநாடு தொகுதி மக்கள் 2வது முறையாக பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் தன்னை ஜெயிக்க வைத்திருப்பதாலும் அந்தத் தொகுதியை ராகுல் காந்தி ராஜினாமா செய்யமாட்டார் என்ற தகவல்கள் வெளியாகி வருகின்றன. ரேபரேலியை அவர் ராஜினாமா செய்து அங்கு பிரியங்கா காந்தி போட்டியிடலாம் என்றும் கூறப்படுகிறது.


காந்தி குடும்பத்துத் தொகுதியாக இதுகாலம் வரை உத்தரப் பிரதேச மாநிலத்தின் அமேதி மற்றும் ரேபரேலி ஆகிய இரு தொகுதிகளும் இருந்து வந்தன. இந்தத் தொகுதிகளிலிருந்துதான் இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் தொடர்ந்து தேர்ந்தெடுக்கப்பட்டு வந்தனர்.




இடையில் ஒருமுறை சோனியா காந்தி ரேபரேலி மற்றும் கர்நாடக மாநிலம் பெல்லாரி ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டார். அதுவும் கூட பாஜக விடுத்த சவாலை ஏற்று அவர் பெல்லாரியில் போட்டியிட்டார். அவரை எதிர்த்து மறைந்த சுஷ்மா சுவராஜ் போட்டியிட்டார். அத்தேர்தலில் சோனியா காந்தி அபார வெற்றிபெற்றார். வெற்றிக்குப் பின்னர் பெல்லாரியை அவர் ராஜினாமா செய்து விட்டார். அதன் பிறகு தொடர்ந்து ரேபரேலியில் மட்டுமே சோனியா போட்டியிட்டு வந்தார்.


இந்த நிலையில் ராகுல் காந்தி கடந்த 2019 தேர்தலில் அமேதியுடன், வயநாடு தொகுதியிலும் போட்டியிட்டார். இதில் மிகப் பெரிய வெற்றியையும் அவர் பெற்றார். ஆனால் அமேதியில் அவர் தோல்வியுற்றார். இந்த நிலையில் 2024 தேர்தலிலும் அவர் வயநாடு தொகுதியில் போட்டியிட்டார். கூடுதலாக ரேபரேலி தொகுதியிலும் ராகுல் காந்தியை காங்கிரஸ் நிறுத்தியது. காரணம்,, சோனியா காந்தி ராஜ்யசபா எம்பி ஆகி விட்டதால்.


இந்த நிலையில் தற்போது வயநாடு, ரேபரேலி ஆகிய இரு தொகுதிகளிலும் சிறப்பான வெற்றியைப் பெற்றுள்ளார் ராகுல் காந்தி. மறுபக்கம் அமேதி தொகுதியிலும் காங்கிரஸ் கட்சி அபார வெற்றி பெற்றுள்ளது. அங்கு கடந்த முறை ராகுல் காந்தியை வீழ்த்திய ஸ்மிருதி இராணி தோல்வியடைந்துள்ளார்.


வயநாடா.. ரேபரேலியா?




தற்போது ராகுல் காந்தி என்ன செய்யப் போகிறார்.. வயநாடு தொகுதியை ராஜினாமா செய்வாரா அல்லது ரேபரேலியை ராஜினாமா செய்வாரா என்ற கேள்வி வலுத்துள்ளது. கேரளாவில் இந்த முறை கம்யூனிஸ்டுகளின் செல்வாக்கு முற்றிலும் சரிந்து போய் விட்டது. அங்கு மக்கள் காங்கிரஸுக்கு பேராதரவு கொடுத்துள்ளனர். மொத்தம் உள்ள 20 தொகுதிகளில் 14 இடங்களை காங்கிரஸ் அள்ளியுள்ளது. கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு ஒரு சீட்டில் மட்டுமே வெற்றி கிடைத்துள்ளது. பாஜகவுக்கு ஒன்றும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு 2 இடங்களிலும் வெற்றி கிடைத்துள்ளது.


இப்படிப்பட்ட நிலையில் வயநாடு தொகுதியை ராகுல் காந்தி ராஜினாமா செய்வது சரியாக இருக்காது என்ற கருத்து எழுந்துள்ளது. ராகுல் காந்தி தொடர்ந்து வயநாடு எம்.பியாக இருந்தால், கேரளாவில் காங்கிரஸ் மேலும் வலுவடையும். சட்டசபைத் தேர்தலில் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க முடியும். அதேசமயம், தென் மாநிலங்களிலும் காங்கிரஸுக்கு வளர்ச்சி கிடைக்க இது உதவும். தென் மாநிலங்களை ராகுல் காந்தி மதிக்கிறார் என்ற செய்தி போய்ச் சேரும். இதனால் தென் மாநிலங்களில் அடுத்த தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு கூடுதல் எம்.பிக்கள் கிடைக்கவும் வாய்ப்பு ஏற்படும் என்று மூத்த காங்கிரஸ் தலைவர்கள் கூறுகிறார்கள்.


இதை வைத்துப் பார்க்கும்போது அனேகமாக வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி தொடருவார் என்றே தெரிகிறது. அதேசமயம், ரேபரேலி தொகுதியில் அவர் ராஜினாமா செய்தால் அங்கு அவரது தங்கை பிரியங்கா காந்தியை நிறுத்த வாய்ப்புகள் அதிகம் உள்ளன. அவரும் எம்.பியாகி லோக்சபாவுக்கு வந்தால் பாஜக கூட்டணி அரசுக்கு ராகுல் காந்தியும் - பிரியங்காவும்  இரட்டைத் தலைவலியாக மாறுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.