மணமணக்கும் "சம்பாரன் மட்டன்"..  கலகல சமையல்.. லாலுவுடன் கை கோர்த்த ராகுல்!

Su.tha Arivalagan
Sep 03, 2023,02:59 PM IST
டெல்லி: டெல்லியில் லாலு பிரசாத் யாதவின் மகள் மிசா  பார்தியின் வீட்டில் சமீபத்தில் ராகுல் காந்தி விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது நடந்த சுவாரஸ்யத்தை அவர் தொகுத்து வீடியோவாக வெளியிட்டுள்ளார்.

ராகுல் காந்தி டாப் டூ பாட்டம் அதிரடியாக போக ஆரம்பித்துள்ளார். ஒரு பக்கம் காங்கிரஸ் தலைவர்களுடன் அவ்வப்போது ஆக்கப்பூர்வமான உரையாடல்கள், சந்திப்புகள், வயநாடு தொகுதி விசிட்.. இன்னொரு பக்கம் பாஜகவை விமர்சனங்களால் வறுத்தெடுப்பது.. பிரதமர் மோடிக்கு சரமாரியாக கேள்விகள் கேட்பது.. அடுத்து எதிர்க்கட்சித் தலைவர்களுடன் அடிக்கடி பேசிப் பழகி நல்லுறவைப் பேணுவது.. திடீர் திடீரென மக்களைப் போய்ச் சந்திப்பது என்று அதிரடி காட்டி வருகிறார்.



அந்த வகையில் சமீபத்தில் டெல்லியில் உள்ள லாலு பிரசாத் யாதவின் மகள் மிசா பார்தி வீட்டுக்கு ராகுல் காந்தி போயிருந்தார். இங்குதான் லாலு பிரசாத் யாதவ் ஓய்வெடுத்து வருகிறார். அங்கு ராகுல் காந்திக்கு சூப்பரான மட்டன் விருந்து அளித்துக் கெளரவித்தார் லாலு பிரசாத்யாதவ்.

என்ன விசேஷம் என்றால் இந்த மட்டன் விருந்தை தயார் செய்ததே லாலு பிரசாத் யாதவ்தான்.. அவர் சமையல் செய்தபோது ராகுல் காந்தியும் சேர்ந்து சமையலில் இறங்கி ஒரு கை பார்த்துள்ளார். இதுகுறித்து ஒரு நீண்ட வீடியோவை தற்போது ரிலீஸ் செய்துள்ளார் ராகுல் காந்தி.

சம்பாரன் மட்டன் என்பது பீகாரில் மிகவும் பிரபலமான அசைவ உணவாகும். இந்த உணவு வகையைத்தான் ராகுல் காந்திக்கு செய்து கொடுத்துள்ளார் லாலு பிரசாத் யாதவ். அந்த சமையலின்போது அதை எப்படிச் செய்ய வேண்டும் என்ற ரெசிப்பியையும் கேட்டுக் கொண்டாராம் ராகுல் காந்தி.

எதை எதை எப்படிக் கலக்க வேண்டும் என்று லாலு பிரசாத் யாதவ் விளக்கிக் கொண்டிருக்கும்போதே, நீங்க அரசியலிலும் இப்படித்தான் மசாலாக்களை கலப்பீர்களா என்று ராகுல்  காந்தி கலாய்க்க அந்த இடமே கலகலப்பானது. சமையலோடு அரசியலும் பேச மறக்கவில்லை இந்தத் தலைவர்கள். அடிக்கடி பாஜக மக்களிடையே துவேஷத்தை பரப்புகிறதே ஏன் லாலு ஜி என்று ராகுல் காந்தி கேட்க, அதிகாரப்பசி அவர்களுக்கு அதிகம் உள்ளது. அதுதான் காரணம் என்று சொல்கிறார் லாலு பிரசாத் யாதவ்.



லாலு பிரசாத் யாதவுடனான சந்திப்பு குறித்து ராகுல் காந்தி கூறுகையில், நான் எப்போதுமே லாலு பிரசாத் யாதவிடம் பேசுவதை விரும்புவேன். அவர் மிகப் பெரிய அரசியல் ஞானி. மிகவும் துல்லியமாக பேசுவார். ஒரு வார்த்தை கூட வீணாக இருக்காது.  அவரிடமிருந்து அரசியல் மட்டுமல்ல இப்போது சமையலும் கூட கற்றுக் கொண்டுள்ளேன் என்று கூறியுள்ளார் ராகுல் காந்தி.

ராகுல் காந்தி லோக்சபா தேர்தல் சமயத்தில் தமிழ்நாட்டுக்கு வந்திருந்தபோது பிரபல குக்கிங் யூடியூபர்களுடன் இணைந்து சமையலில் கலந்து கொண்டு நாட்டையே கலகலக்க வைத்தார் என்பது நினைவிருக்கலாம்.