சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு எதிரொலி.. ராகுல் காந்திக்கு மீண்டும் எம்.பி பதவி
Aug 07, 2023,10:34 AM IST
டெல்லி: சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு உத்தரவை ஏற்று ராகுல் காந்திக்கு எம்.பி பதவியை மீண்டும் வழங்காவிட்டால் சுப்ரீம் கோர்ட்டை நாட காங்கிரஸ் தீர்மானித்திருந்த சில மணி நேரங்களிலேயே அவரது எம்.பி பதவி தகுதி நீக்க உத்தரவை வாபஸ் பெற்று மக்களவை செயலகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கேரள மாநிலம் வயநாடு லோக்சபா தொகுதியிலிருந்து நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் காங்கிரஸ் இளம் தலைவர் ராகுல் காந்தி. கடந்த 2016 லோக்சபா தேர்தலின்போது கர்நாடக மாநிலம் பெல்லாரியில் நடந்த தேர்தல் பிரசாரத்தின்போது மோடி என்ற துணைப் பெயர் குறித்து ராகுல் காந்தி பேசியது சர்ச்சையைக் கிளப்பியது. இதுதொடர்பாக குஜராத் மாநிலம் சூரத் கோர்ட்டில் வழக்கு போடப்பட்டது.
இந்த அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு மிகப் பெரிய தண்டனையாக அதிகபட்ச தண்டனையான 2 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சிறைத் தண்டனையைத் தொடர்ந்து அவர் உடனடியாக எம்.பி பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார் ராகுல் காந்தி. அதில் இடைக்கால தீர்ப்பாக, தண்டனையை நிறுத்தி வைத்து சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்தது.
இருப்பினும் உடனடியாக அவரது எம்.பி பதவி தகுதி நீக்க உத்தரவை மக்களவை செயலகம் ரத்து செய்யாமல் இருந்து வந்தது. இதுவும் சலசலப்பை ஏற்படுத்தியது. காங்கிரஸ் இதற்குக் கண்டனம் தெரிவித்திருந்தது. நாளை லோக்சபாவில் மோடி அரசு மீதான நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின் மீது நடக்கும் விவாதத்தில் ராகுல் காந்தி பங்கேற்க வேண்டும் என்பதில் காங்கிரஸ் உறுதியாக இருந்து வந்தது. ஆனால் மக்களவை செயலகம் அமைதி காத்து வந்ததால் காங்கிரஸ் தரப்பு அதிருப்தி அடைந்தது.