நீட் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கலாம் வாங்க.. பிரதமர் நரேந்திர மோடிக்கு ராகுல் காந்தி கடிதம்!

Su.tha Arivalagan
Jul 02, 2024,07:59 PM IST

டெல்லி: நீட் முறைகேடுகள் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கலாம். நாளையே விவாதத்தை வைத்துக் கொள்ளலாம் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடிதம் எழுதி அழைப்பு விடுத்துள்ளார்.


நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் ஆற்றிய உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் நேற்று தொடங்கியது முதலே லோக்சபாவில் அனல் பறந்து வருகிறது. விவாதத்தைத் தொடங்கி வைத்துப் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி 2 மணி நேரம் பொறிந்து தள்ளி விட்டார். அவரது பேச்சுக்களுக்கு பாஜகவினர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்த வண்ணம் இருந்தனர். பிரதமர் மோடியே கூட 2 முறை எதிர்ப்பு தெரிவித்து எழுந்து பேசினார். 


ராகுல் காந்தியைத் தொடர்ந்து திரினமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ராவும் அனல் பறக்கப் பேசினார். திமுக சார்பில் ஆ ராசா அதிரடியாக பேசினார். இந்த நிலையில் இன்னும் கூட விவாதம் தூள் பறந்தது. மாலையில் பிரதமர் நரேந்திர மோடி விவாதத்திற்குப் பதில் அளித்துப் பேசினார். அவரது பேச்சின்போது எதிர்க்கட்சிகள் கொந்தளித்து முழக்கப் போராட்டத்தில் குதித்தனர். இதனால் பிரதமரின் பேச்சு முழுவதும் கடும் அமளிக்கு மத்தியில்தான் தொடர்ந்தது.




இந்த நிலையில் தற்போது பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக மக்களவையில் விவாதத்திற்கு வருமாறு பிரதமருக்கு ராகுல் காந்தி அழைப்பு விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:


நாடாளுமன்றத்தில் நீட் தேர்வு முறைகேடு குறித்து விவாதம் நடத்த முன்வருமாறு இந்தக் கடிதம் மூலம் உங்களை அழைக்கிறேன். இந்த விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும் என்ற கோரிக்கை நிராகரிக்கப்பட்டு விட்டது.  இதுகுறித்து விவாதிக்க வேண்டும் என்று நாங்கள் மீண்டும் வேண்டுகோள் விடுத்திருக்கிறோம். இதுதொடர்பாக அரசுடன் பேசுவதாக மக்களவை சபாநாயகர் தெரிவித்துள்ளார்.


இந்த விவகாரம் தொடர்பாக ஆக்கப்பூர்வமான விவாதம் நடைபெற வேண்டும் என்பதே எங்களது நோக்கம்.  இது கிட்டத்தட்ட 24 லட்சம் நீட் தேர்வுக் கனவில் இருப்போரின் எதிர்காலம் குறித்த கவலையாகும். லட்சக்கணக்கான குடும்பங்கள் இந்தத் தேர்வுக்காக பணம், உடல் உழைப்பு, நேரம் உள்ளிட்டவற்றை தியாகம் செய்து தங்களது பிள்ளைகளைத் தயார்படுத்துகின்றனர். இது அவர்களது வாழ்நாள் கனவு.  இந்தக் கனவை கேள்வித்தாள் லீக் சிதறடித்து விட்டது. இந்த குடும்பங்களும், மாணவர்களும் தற்போது நம்மை எதிர்நோக்கியுள்ளனர். மக்கள் பிரதிநிதிகளாகிய நாம் ஏதாவது செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.


நீட் தேர்வு குறித்து நாம் கவனம் செலுத்தியாக வேண்டும். உடனடி கவனம் அதற்குத் தேவைப்படுகிறது.  இந்தப் பிரச்சினையைத் தீர்க்க வேண்டும். நமது உயர் கல்வி முறையில் இது பெரும் சீரழிவை ஏற்படுத்தி விட்டது. கடந்த 7 ஆண்டுகளில் 70 முறை கேள்வித்தாள் லீக் சம்பவங்கள் நடந்துள்ளன.  இதனால் 2 கோடி மாணவ ,மாணவியர் பாதிக்கப்பட்டுள்ளனர். தேர்வை தள்ளிப் போடுவது, தேசிய தேர்வு முகமையின் தலைவரை மாற்றுவது ஆகியவை இந்த மோசடியையும், தோல்வி அடைந்த நீட் தேர்வு முறையையும் மூடி மறைக்கும் செயலாகும்.


நமது மாணவர்களுக்கு பதில் தேவை. இதற்கு நாடாளுமன்ற விவாதம் அவசியாகும். அதுவே சரியான வழியுமாகும். அதுதான் அவர்களுக்கு நம்பிக்கை அளிக்கும்.  இந்த பிரச்சினையின் தீவிரத்தை உணர்ந்து, அரசு இதுதொடர்பாக நாளை விவாதம் நடத்த முன்வர வேண்டும்.  மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு நீங்களே இந்த விவாதத்தைத் தொடங்கி வைக்க வேண்டும் என்று விரும்புகிறேன் என்று கூறியுள்ளார் ராகுல் காந்தி.