பிரதமர் மோடி பயணம்.. ரூ. 80 லட்சம் பில் பாக்கி.. கர்நாடக வனத்துறைக்கு மைசூரு ஹோட்டல் எச்சரிக்கை!

Su.tha Arivalagan
May 25, 2024,12:31 PM IST

மைசூரு: பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் மைசூருக்கு வந்திருந்தபோது அவர் தங்கிச் சென்ற ஹோட்டலுக்கு கர்நாடக மாநில வனத்துறை ரூ. 80 லட்சம் பில் பாக்கியை நிலுவையில் வைத்துள்ளதாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பாக்கித் தொகையைத் தராவிட்டால் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப் போவதாக ஹோட்டல் நிர்வாகம் எச்சரித்துள்ளது.


இதுதொடர்பாக  தி இந்து நாளிதழ் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: 




பிரதமர் மோடி கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் மைசூருக்கு வந்திருந்தார். மைசூரில் உள்ள ரேடிசன் ப்ளூ பிளாசா ஹோட்டலில் தங்கினார். பிராஜக்ட் டைகர் திட்டத்தைத் தொடங்கி வைப்பதற்காக அவர் வந்திருந்தார். இந்த நிகழ்ச்சிக்கு தேசிய புலிகள் காப்பக ஆணையகம், மத்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்திருந்தன.


இந்த நிகழ்ச்சியை நடத்திக் கொடுக்குமாறு மாநில வனத்துறையை மத்திய அரசு கேட்டுக் கொண்டது. அதன் பேரில் ஏப்ரல் 9 முதல் 11ம் தேதி வரை இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது. முதலில் இந்த நிகழ்ச்சிக்காக ரூ. 3 கோடி நிதி செலவாகும் என திட்டமிடப்பட்டது. முழுத் தொகையையும் மத்திய அரசே கொடுக்கும் என்று மாநில வனத்துறைக்கு உத்தரவாதமும் அளிக்கப்பட்டதாக தெரிகிறது.


ஆனால் திடீரென நிகழ்ச்சி திட்டமிடப்பட்டதால், கணக்கிட்டதை விட இரட்டிப்பு செலவாகியுள்ளதாக தெரிகிறது. நிகழ்ச்சி முடிவடைந்த பின்னர் மத்திய அரசு ரூ. 3 கோடியை மட்டும் விடுவித்துள்ளது. ஆனால் செலவுத் தொகையில் பாக்கி ரூ. 3.3 கோடியை மத்திய அரசு அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதுதொடர்பாக பலமுறை மாநில வனத்துறை மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பியும் பாக்கித் தொகையை மத்திய அரசு இதுவரை விடுவிக்கவில்லையாம்.


கடந்த அக்டோபர் மாதம் இதுதொட்பாக மத்திய அரசுத் தரப்பிலிருந்து மாநில அரசுக்கு ஒரு உத்தரவு வந்துள்ளது. அதில் ரேடிசன் ஹோட்டல் கட்டணத் தொகையை மாநில அரசே செலுத்த வேண்டும் என்று கூறப்பட்டிருந்ததாம். ரேடிசன் ஹோட்டலுக்கு மட்டும் ரூ. 80.6 லட்சம் கட்டணப் பாக்கி உள்ளதாம்.  இந்தத் தொகையைத் தருமாறு மத்திய அரசுக்கு பலமுறை மாநில அரசு நினைவூட்டல் கடிதங்கள் அனுப்பியும் இதுவரை பதில் இல்லை என்று கூறப்படுகிறது.


இந்த நிலையில் தற்போது ரேடிசன் ப்ளூ ஹோட்டல் நிர்வாகம் சட்ட நடவடிக்கையில் இறங்கப் போவதாக எச்சரித்துள்ளது.  இதுதொடர்பாக ரேடிசன் ஹோட்டல் பொது மேலாளர் கர்நாடக மாநில வனத்துறை துணைப் பாதுகாவலர் பசவராஜுக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். அதில், எங்களது ஹோட்டலை பயன்படுத்திச் சென்று 12 மாதங்களாகியும் கூட இதுவரை எங்களது நிலுவைத் தொகை கட்டப்படாமல் உள்ளது.


நிலுவைத் தொகையை செலுத்துவதில் ஏற்பட்ட தாமதத்திற்கான வட்டியாக வருடத்திற்கு 18 சதவீதம் என்று கூடுதலாக ரூ. 12.09 லட்சம் வட்டிக் கட்டணம் வருகிறது. கட்டண பாக்கியுடன் இதையும் சேர்த்து செலுத்த வேண்டும். ஜூன் 1ம் தேதிக்குள் நிலுவைக் கட்டணம் செலுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று ஹோட்டல் நிர்வாகம் எச்சரித்துள்ளது.