திட்டாதீங்கப்பா.. சின்னப் பசங்க.. கத்துக்குவாங்க".. அஸ்வின் சப்போர்ட்!

Su.tha Arivalagan
Aug 15, 2023,04:15 PM IST
சென்னை: மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான டி20 தொடரை இந்திய அணி இழந்துள்ளதைத் தொடர்ந்து கடும் விமர்சனம் எழுந்துள்ளது. இந்த நிலையில் இந்திய அணிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார் சுழற்பந்து வீச்சாளர் ஆர். அஸ்வின்.

இந்தியா - மேற்கு இந்தியத் தீவுகள் இடையிலான டி20 தொடரை 2-3 என்ற கணக்கில் இந்தியா இழந்துள்ளது. ஹர்டிக் பாண்ட்யாத தலையிலான இந்திய அணியில் பெரும்பாலும் இளம் வீரர்களே இடம் பெற்றிருந்தனர். இந்த அணி முதல் இரு டி20 போட்டிகளை இழந்த நிலையில், அடுத்த 2 போட்டிகளில் வெற்றி பெற்றது. ஆனால் கடைசிப் போட்டியில் இந்தியா தோல்வியுற்றது.



தொடரை இழந்ததால்  இந்திய வீரர்கள் கடும் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளனர். உலகக் கோப்பைப் போட்டிக்குக் கூட தகுதி பெறாத அணியிடம் போய் இந்தியா தோற்பதா என்று பலரும் கிண்டலடித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்திய  அணிக்கு ஆதரவாக பேசியுள்ளார் ஆர். அஸ்வின்.

இதுகுறித்து அஸ்வின் கூறியிருப்பதாவது:

இந்த டி20 தொடரில் நிறைய பாசிட்டிவான விஷயங்கள் உள்ளன. தயவு செய்து எல்லோரும் அதைப் பாருங்க. ஒரு டீம் தோற்கும்போது அதை ஈஸியாக விமர்சித்து விடலாம்.  உண்மைதான்.. மேற்கு இந்தியத் தீவுகள் அணி டி20 உலகக் கோப்பை மட்டுமல்ல, 50 ஓவர் உலகக்கோப்பைப் தொடருக்கும் கூட தகுதி பெறாத அணிதான். ஆனால் அதற்காக அந்த அணியை வெல்லவே முடியாது என்பது தவறான கருத்தாகும்.

நான் யாரையும் சப்போர்ட் செய்யவில்லை. யாருக்கும் ஆதரவாகவும் பேசவில்லை. அதெல்லாம் அடுத்தபட்சம். ஒரு இளம் வீரராக ஒரு நாட்டுக்குப் போகும்போது உள்ளூர் வீரர்களுக்கு அது சாதகமாக அமையும். இளம் வீரர்கள் நிச்சயம் முதல் தொடரில் திணறத்தான் செய்வார்கள். அதைப் பயன்படுத்தி உள்ளூர் அணி வெற்றிகளைப் பெறத்தான் செய்யும்.  எனக்கே கூட இங்கிலாந்து, மேற்கு இந்தியத் தீவுகள், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்குப் போனபோது இப்படிப்பட்ட நிலை ஏற்படத்தான் செய்தது.

இதெல்லாம் முதன் முறையாக விளையாடப் போகும் கிடைக்கும் அனுபவங்கள்தான். ஆனால் அவர்கள் நிச்சயம்  நிறைய கற்றுக் கொண்டிருப்பார்கள். அடுத்த முறை சிறப்பாக விளையாடுவார்கள் என்றார் அஸ்வின்.

அடுத்து இந்திய அணி அயர்லாந்துடன் டி20 தொடரில் விளையாடவுள்ளது. இதைத் தொடர்ந்து ஆசியா கோப்பைப் போட்டியில் இந்தியா பங்கேற்கவுள்ளது.