Veg Eeral Gravy: "திரிஷா இல்லாட்டி திவ்யா".. ஈரல் இல்லாட்டி "வெஜ் ஈரல் கிரேவி"!

Meena
Oct 07, 2023,02:21 PM IST

- மீனா


சென்னை: திரிஷா இல்லாட்டி திவ்யா.. அப்படின்னு ஒரு படத்தில் வடிவேலு வசனம் பேசுவார்.. அது இல்லாட்டி என்ன.. இது என்று எதையும் எதார்த்தமாக எடுத்துக் கொண்டு "மூவ்" ஆகணும் என்பதே அதன் உள்ளர்த்தம் (நிஜமாவே அதுதான் அர்த்தமா???)..  அப்படித்தான் இந்த ஸ்டோரியும்.. வாங்க என்னான்னு பார்ப்போம்.


"இருக்கு ஆனா இல்லை" .. இதுவும் ஒரு சினிமா வசனம்தான்.. ஒரு படத்தில் எஸ். ஜே சூர்யா பேசி மிரட்டியிருப்பார்.. இதற்கு அர்த்தம், "இருக்கிற மாதிரி இருக்கு ஆனா இல்ல" என்று கலகலக்க வைத்திருப்பார். 


"பாஸ் பாஸ்.. என்னதான் சொல்ல வர்றீங்க.. லைட்டா தலை கிறுகிறுக்குது"ன்னு நீங்க சொல்றது கேக்குது.. அதைத்தான் சொல்ல வர்றோம்.. கொஞ்சம் வெயிட்!


புரட்டாசி மாதம் பொறந்தாலே நான்வெஜ் பிரியர்களுக்கு ரொம்ப சங்கட்டமாகி விடுகிறது. ஏனென்றால் இந்த மாதத்தில் அநேகர் நான்வெஜ் சாப்பிட மாட்டார்கள். இந்த புரட்டாசி மாதத்தில் நான்வெஜ் சாப்பிடாதவர்களை கலாய்க்கும் வகையில் நிறைய மீம்ஸ்களும், ஜோக்ஸ்களும் கூட வந்து கொண்டே இருக்கின்றன. இந்த மாதிரி நீங்களும் கூட நான்வெஜ் சாப்பிட முடியலையே என்று  நினைக்கிறீங்களா . அப்போ உங்களுக்கான மேட்டர்தாங்க இது.. (அலோ.. அது என்னான்னு இன்னும்  சொல்லவே இல்லை நீங்க!)




அதாவது "வெஜிடேரியன் ஈரல் வறுவல்".. இதைப் பத்தித்தான் இப்பப் பார்க்கப் போறோம்!


பொதுவாக எப்பொழுதுமே நான்வெஜ் சாப்பிடாதவர்கள் கூட இந்த ரெசிபியை செய்து சாப்பிடலாம் . ஏனென்றால் இது ஒரு பியூர் வெஜ் ரெசிபி தான். ஆனால் நான் வெஜ் சுவையில். ஆடு, கோழி ஈரல் நாம் செய்து சாப்பிட்டிருப்போம்.  செம டேஸ்ட்டான நான் வெஜ் ஐட்டம் அது. அதில் அதிக அளவு புரோட்டின் உள்ளது. ரத்த சோகை உள்ளவர்கள் அதை தாராளமாக சாப்பிடலாம். அதேபோலத்தான் இந்த வெஜிட்டேரியன் ஈரல் வறுவலிலும் கூட அதிக அளவு புரோட்டீன் உள்ளது. ஏனென்றால் நாம் செய்யப் போவதே புரோட்டீன் அதிகம் உள்ள பாசிப்பயிரை வைத்துத்தான்.  (அப்றம் ஏன் மேடம் இழுத்தடிக்கிறீங்க.. உடனே போய் செயல்முறையைச் சொல்லுங்க ஓடுங்க)


வெஜ் ஈரல் கிரேவி செய்ய தேவையான பொருட்கள்:


பாசிப்பயறு -1 கப்

சின்ன வெங்காயம் -15

தக்காளி -  2

பச்சை மிளகாய் - 2

இஞ்சி பூண்டு பேஸ்ட் -1 ஸ்பூன்

மிளகாய் தூள் - 2 ஸ்பூன்

மல்லி தூள் - 2 ஸ்பூன்

மட்டன் மசாலா - 1 ஸ்பூன்

மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்

உப்பு - தேவைக்கேற்ப


தாளிப்பதற்கு தேவையானவை:


நல்லெண்ணெய் - 3 ஸ்பூன்

பட்டை, கிராம்பு, சோம்பு - சிறிதளவு

கருவேப்பிலை - சிறிதளவு 

கொத்தமல்லி இலை - சிறிதளவு (நறுக்கியது)


செய்முறை:


முதலில் பாசிப்பயறை நன்கு கழுவி நான்கு மணி நேரம் நன்றாக ஊற வைக்க வேண்டும். ஊறிய பாசிப்பயிரை மிக்ஸி ஜாரில் மாற்றி, அதனுடன் உப்பு பச்சை மிளகாயை போட்டு சிறிதளவு மட்டும் தண்ணீர் சேர்த்து நன்கு அரைக்க வேண்டும். இந்த அரைத்த கலவையை நல்லெண்ணெய் தடவிய பாத்திரத்தில் கொட்டி அதை  இட்லியை வேக வைப்பது போல்  ஆவியில்  வேக வைக்க வேண்டும். 




15 நிமிடம் கழித்து இந்த பாத்திரத்தை எடுத்து சூடு ஆறிய  பிறகு கத்தியால் கியூப் கியூபாக கீறினால் ஈரல் ஷேப்பில் நமக்கு வெஜ் ஈரல் கிடைத்துவிடும். இப்பொழுது வெஜ் ஈரல் ரெடி. இதை வைத்து எப்படி கிரேவியாக செய்யலாம் என்று பார்ப்போம். அதற்கு ஒரு பாத்திரத்தில் நல்லெண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு, சோம்பு போட்டு பொறியவிட்டு, அதனுடன் கருவேப்பிலையும் சேர்த்து  தாளித்து கொள்ள வேண்டும். பிறகு மேலும் இஞ்சி பூண்டு பேஸ்ட்டையும் இதனுடன் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். பிறகு சின்ன வெங்காயத்தை மிக்ஸியில் அரைத்து பேஸ்ட் போல் ஆனதும் அதை இதில் போட்டு நன்கு பச்சை வாசனை போகும் அளவிற்கு வதக்க வேண்டும்.


தக்காளியை சிறு துண்டுகளாக வெட்டி இதனுடன் உப்பும் சேர்த்து நன்கு வதக்கி கொள்ள வேண்டும். வதங்கிய பிறகு மிளகாய் பொடி, மல்லி பொடி, மட்டன் மசாலா, மஞ்சள் தூள் எல்லாவற்றையும் ஒன்றன்பின் ஒன்றாக போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி நன்கு வேக விட வேண்டும். வெந்த பிறகு நாம் ஏற்கனவே செய்து வைத்த  வெஜ் ஈரலை இதனுடன் சேர்ந்து ஒரு ஐந்து நிமிடம் சிம்மில் வைத்து மூடிவிட வேண்டும். 


கிரேவி ரெடி ஆனவுடன் நறுக்கிய மல்லி இலைகளை மேலே தூவினால் நமக்கு நான்வெஜ் சுவையில் வெஜ் ஈரல் கிரேவி ரெடி.


என்னங்க.. நீங்களும் இத செய்ய ரெடி ஆயிட்டீங்க போல.. வாயில ஜொள்ளு ஓடுது.. நிறுத்திட்டு.. செஞ்சு சாப்ட்டு மறக்காம வந்து கமெண்ட் சொல்லுங்க!