புரட்சித் தலைவர்.. புரட்சித் தலைவி.. புரட்சி தமிழர்.. "புரட்சிக் கட்சி".. ஆஹாஹா!

Su.tha Arivalagan
Aug 21, 2023,10:00 AM IST
சென்னை: புரட்சிகள் நிறைந்த நாடுகளை நாம் வரலாற்றில் பார்த்திருப்போம்.. ஆனால் "புரட்சிகள்" நிறைந்த கட்சியை எங்கேயாச்சும் பார்த்திருக்கீங்களா.. பார்த்திருக்க முடியாது.. ஏன்னா அதுதான் தமிழ்நாட்டிலேயே இருக்கே.. அதுதான் நம்ம அதிமுக.

அதிமுக என்ற பெயரைக் கூட "புரட்சிதிமுக" என்று மாற்றிக் கூட வைத்துக் கொள்ளலாம் போல.. அந்த அளவுக்கு கட்சித் தலைவர்கள் எல்லாம் "புரட்சி"கரமாக மாறி நிற்கிறார்கள்.



திமுகவிலிருந்து பிறந்த கட்சிதான் அதிமுக.. திமுக தலைமையுடன் ஏற்பட்ட மோதலால் கட்சியை விட்டு நீக்கப்பட்ட எம்ஜிஆர் அதன் பிறகு தொடங்கிய கட்சிதான் அதிமுக. அதுவரை அவர் புரட்சி நடிகர் என்ற பெயரில்தான் ரசிகர்களால் அழைக்கப்பட்டு வந்தார். ஆனால் அதிமுகவைத் தொடங்கிய பிறகு அவருக்கு பல்வேறு பட்டங்கள் வந்து குவிந்தன.

கட்சி தொடங்கிய பின்னர் அவருக்கு வந்து சேர்ந்த முதல் பட்டம்தான் புரட்சித் தலைவர்.. மறைந்த அ���ைச்சர் கே.ஏ.கிருஷ்ணசாமிதான் இந்தப் பட்டத்தைச் சூட்டினார். இதுவரை எம்ஜிஆர் நடிகராக இருந்தார், எனவே புரட்சி நடிகர் என்று கூப்பிட்டோம், பொருத்தமாக இருந்தது. ஆனால் தற்போது அவர் தலைவராகி விட்டார்.. அதுவும் புரட்சிகரமான முறையில் ஆகியுள்ளார். எனவே இனி அவரை புரட்சித் தலைவர் என்றே அழைப்போம் என்று அவர் சொல்ல அன்று முதல் அவர் புரட்சித் தலைவரானார்.

அதன் பிறகு மக்கள் திலகம், பொன்மனச் செம்மல், வாத்தியார் என்று ஏகப்பட்ட பட்டங்கள் அவரைச் சூழ்ந்து நின்றாலும் கடைசி வரை அதிமுகவினருக்கு அவர் புரட்சித் தலைவர்தான்.

எம்ஜிஆர் காலத்திலேயே ஜெயலலிதாவும் லைம்லைட்டுக்கு வந்து விட்டார். குறிப்பாக மதுரை உலகத் தமிழர் மாநாட்டின்போது எம்ஜிஆருக்கு செங்கோல் கொடுத்தபோதே அவரை புரட்சித் தலைவி என்றுதான் அதிமுகவினர் அழைத்தனர். இதை ஆரம்பத்தில் எம்ஜிஆர் ரசிக்கவில்லை. ஆனாலும் தொண்டர்கள் மத்தியில் தனக்கு அடுத்து ஜெயலலிதாதான் என்ற எண்ணம் பரவியிருப்பதை உணர்ந்த எம்ஜிஆர் அதை அப்படியே கண்டு கொள்ளாமல்விட்டு விட்டார்.



எம்ஜிஆர் காலத்திலேயே ஜெயலலிதாவை அடையாளம் கண்டு விட்ட தொண்டர்களுக்கு, அவரது மறைவுக்குப் பின்னர் இயல்பாகவே புரட்சித் தலைவியாகி விட்டார். எம்ஜிஆரைக் கூட வெறுமனே புரட்சித் தலைவர் மக்கள் திலகம் என்று ஒரு பட்டத்தோடு நிறுத்திக் கொண்டுதான் அதன் தலைவர்கள் அழைப்பார்கள். ஆனால் ஜெயலலிதாவை விளிப்பதற்கென்றே ஒரு "ஆர்டர்" உண்டு. அதை கரெக்டாக மனப்பாடம் செய்து கொண்டுதான் தலைவர்கள் அழைப்பார்கள்.

"புரட்சித் தலைவி மாண்புமிகு இதயதெய்வம் அம்மா".. இதுதான் அந்த ஆர்டர்.  அதிமுக முன்னணித் தலைவர்கள் ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது பேசிய வீடியோக்களைப் பார்த்தால் இந்த ஆர்டர் கரெக்டாக மெயின்டெய்ன் ஆவதைப் பார்க்கலாம். ஆனால் இப்போதெல்லாம் இதை யாரும் சரியாக கடைப்பிடிக்கிறார்களா என்று தெரியவில்லை.

இந்த வரிசையில்தான் தற்போது புரட்சித் தமிழர் ஆக முடி சூட்டப்பட்டுள்ளார் எடப்பாடி பழனிச்சாமி. இதற்கு ஒரு தில் வேண்டும்.. ஒரு வில்பவர் வேண்டும். காரணம், எம்ஜிஆர், ஜெயலலிதா என்ற இரு பிம்பங்கள்தான் அதிமுகவினருக்கு தெரியும்..அவர்களைத் தாண்டி அவர்கள் வேறு யாரையும் சிந்திக்கக் கூட மாட்டார்கள். அப்படிப்பட்டவர்களைக் கூட்டி வைத்துக் கொண்டு புரட்சித் தமிழர் என்ற பட்டத்தை பெருமையுடன் பறை சாற்றிக் கொண்டுள்ளார் எடப்பாடி பழனிச்சாமி என்பது மிகப் பெரியஆச்சரியமாக உள்ளது.



அதிமுகவின் புதிய "ஆளுமை"யாக தன்னை அவர் உருமாற்றிக் கொண்டுள்ளார். நான் வெறும் தலைவன் கிடையாது, நான் வெறும் பொதுச் செயலாளர் கிடையாது.. நான் ஒரு "ஆளுமை".. எம்ஜிஆர், ஜெயலலிதா போல மாபெரும் தலைவர் என்று மறைமுகமாக அல்ல..நேரடியாகவே சுட்டிக் காட்டியுள்ளார் எடப்பாடி பழனிச்சாமி. இது பாஜகவுக்கோ அல்லது திமுகவுக்கோ விடுக்கப்பட்ட மெசேஜ் அல்ல.. மாறாக அதிமுகவுக்கே கூட அவர் ஸ்டிராங்கான மெசேஜைக் கொடுத்துள்ளார்.

என்ன ஒன்று.. எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்குக் கிடைத்த பட்டங்கள் இயல்பாக வந்து சேர்ந்தவை.. ஆனால் எடப்பாடியாருக்கு வந்துள்ள பட்டம் இதற்கு முன்பு சத்தியராஜ் வசம் இருந்தது.. அவரிடம் சொல்லி விட்டு இதைக் கொடுத்தார்களா அல்லது அவர்களே எடுத்துக் கொண்டார்களா என்றுதான் தெரியவில்லை.