வெள்ளக்காடான புன்னக்காயல்.. எங்கு பார்த்தாலும் வெள்ளம்.. தீவு போல மாறியதால் மக்கள் வெளியேற்றம்!

Su.tha Arivalagan
Dec 14, 2024,08:04 PM IST

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள புன்னக்காயல் கிராமம் முழுக்க முழுக்க தீவு போல மாறிக் காணப்படுகிறது. தாமிபரணி ஆறு கடலில் கலக்கும் இடமான இங்கு மிகப் பெரிய அளவில் வெள்ளம் வந்து கொண்டிருப்பதால் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.


தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் வெள்ளக்காடாக மாறி இருக்கிறது. குறிப்பாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரை புரண்டோடுகிறது. தாமிரபரணி ஆறு கடைசியாக கடலில் கலக்கும் இடம்தான் புன்னக்காயல். கிட்டத்தட்ட 1500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ள இங்கு கிட்டத்தட்ட 20,000 பேர் வரை வசிக்கிறார்கள்.




ஒவ்வொரு பெரு வெள்ளத்தின்போதும் புன்னக்காயல் பகுதி கடுமையாக பாதிக்கப்படுகிறது. காரணம் தாமிரபரணி ஆற்றில் பெரும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டால் இந்த கிராமம் தீவு போல மாறி விடும். இப்போதும் அது போலத்தான் நூற்றுக்கணக்கான வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. திரும்பிய பக்கமெல்லாம் வெள்ளமாக உள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு இடம் பெயர்ந்துள்ளனர். பலர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உணவு உள்ளிட்டவை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


தூத்துக்குடியிலும் பல பகுதிகளில் வெள்ளக்காடாக காணப்படுகிறது. அரசு மருத்துவமனையில் வெள்ளம் புகுந்ததால் மழை நீருக்கு மத்தியில் அமர்ந்து டாக்டர்கள் பணியாற்றும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கீழ்த்தளத்தில் இருந்தவர்கள் தற்போது மேல் தளத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்