கோதுமை, அரிசி, எண்ணெய், குண்டூசி, சுத்தியல், டீசல்.. பக்கா பிளானுடன் வரும் பஞ்சாப் விவசாயிகள்!
சண்டிகர்: எவ்வளவு நாள் போராட்டம் நீடித்தாலும் எங்களுக்குக் கவலை இல்லை. மாதக் கணக்கில் நீடித்தாலும் பரவாயில்லை. அதற்குத் தயாராகத்தான் நாங்கள் டெல்லியை நோக்கி கிளம்பியுள்ளோம் என்று பஞ்சாப் விவசாயிகள் கூறியுள்ளனர்.
டெல்லி சலோ முழக்கத்துடன் கிட்டத்தட்ட லட்சம் விவசாயிகள் டெல்லியை நோக்கி கிளம்பி வந்தவண்ணம் உள்ளனர். ஹரியானா, பஞ்சாப், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து அவர்கள் டெல்லியை நோக்கி வந்தவண்ணம் உள்ளனர். டிராக்டர்கள், லாரிகள் உள்ளிட்ட வாகனங்களில் இவர்கள் டெல்லியை நோக்கி படையெடுத்து வந்து கொண்டுள்ளனர்.
கண்ணீர்ப் புகை: இவர்களைத் தடுத்து நிறுத்த கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசி போலீஸார் தடுத்துப் பார்த்து வருகின்றனர். டிரோன்கள் மூலமும் கண்ணீர்ப் புகைக் குண்டுகள் வீசப்பட்டன. ஆனாலும் தடைகளைத் தகர்த்து விவசாயிகள் முன்னேறி வருகின்றனர். இதனால் பெரும் பதட்டம் நிலவுகிறது.
பலத்த முன்னேற்பாடுகள்: இதற்கிடையே, விவசாயிகள் தரப்பில் பல்வேறு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. போராட்டம் பல மாதங்களுக்கு நீடித்தாலும் கூட அதை சமாளிக்கும் வகையில், பலத்த ஏற்பாடுகளுடன்தான் விவசாயிகள் போராட்டக் களத்தை நோக்கி வந்து கொண்டுள்ளனராம்.
டெல்லி எல்லையில்: இதேபோலத்தான் 2020ம் ஆண்டு கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு மேல் டெல்லி எல்லையில் முகாமிட்டு விவசாயிகள் போராட்டம் நடத்தினர். அங்கேயே சமைத்து சாப்பிட்டு அவர்கள் போராட்டம் நடத்தினர் என்பது நினைவிருக்கலாம். இப்போதும் அதே போலத்தான் விவசாயிகள் போராட்டத்திற்குத் திட்டமிட்டுள்ளனர்.
குண்டூசி முதல் சுத்தியல் வரை: இதுகுறித்து பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூரைச் சேர்ந்த விவசாயி ஹர்பஜன் சிங் என்பவர் கூறுகையில், சாதாரண குண்டூசி முதல் சுத்தியல் வரை, கோதுமை முதல் எண்ணெய் வரை எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டுதான் வருகிறோம். சாலையில் பெரிய பெரிய கற்களைப் போட்டு தடுத்தாலும் கூட அதை உடைக்கும் கருவிகளையும் எடுத்து வருகிறோம்.
6 மாதமானாலும் தாக்குப் பிடிப்போம்: எங்களது கிராமங்களை விட்டு கிளம்பும்போது ஆறு மாதம் ஆனாலும் கூட தாக்குப் பிடிக்கும் வகையிலான ரேஷன் பொருட்களை எடுத்துக் கொண்டுதான் புறப்பட்டோம். அதேபோல நிறைய டீசலும் எங்களிடம் ஸ்டாக் இருக்கிறது. ஹரியானாவிலிருந்து வருவோருக்கும் சேர்த்தே நாங்கள் கொண்டு வருகிறோம் என்றார்.
பாதியில் முடிக்க மாட்டோம்: ஹர்பஜன் சிங் தொடர்ந்து பேசுகையில், 2020ம் ஆண்டு போல இந்த முறை பாதியிலேயே போராட்டத்தை முடிக்க மாட்டோம். தீர்வு கிடைக்கும் வரை தொடரப் போகிறோம். எங்களுக்கு அரசு அளித்த உறுதிமொழிகளை காற்றில் பறக்க விட்டு விட்டது. இந்த முறை ஒரு கோரிக்கை கூட நிறைவேறாமல் நாங்கள் ஊர் திரும்ப போவதில்ல என்றார்.
தமிழ்நாடு விவசாயிகள் ஆதரவு: டெல்லி விவசாயிகள் முற்றுகைப் போராட்டத்துக்கு தமிழ்நாடு விவசாயிகள் ஆதரவு தெரிவித்துள்ளனர். திருச்சியில் விவசாயிகள் அரை நிர்வாண கோலத்தில் சாலையில் படுத்து ஆர்ப்பாட்டம் செய்து தங்களது ஆதரவைத் தெரிவித்தனர்.
டெல்லியில் பதட்டம்: விவசாயிகள் போராட்டத்தால் டெல்லியிலும் பதட்டம் நிலவுகிறது. டெல்லியின் எல்லைப் பகுதிகளான காஸிப்பூர், திக்ரி, சிங்கு ஆகிய பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சாலையில் ஆணிகளைப் பதித்தும், முள் கம்பிகளை போட்டு வைத்தும், சிமென்ட் தடுப்புகளைப் போட்டும் டெல்லி காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த நடவடிக்கைகள் காரணமாக எல்லைப் பகுதிகளில் வரலாறு காணாத போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது.