வடை சாப்பிட நின்ற அந்த கேப்பில்.. 5 லட்சம் தங்கச் சங்கிலி, மொபைல் போனை பறித்த திருடன்!
புனே: புனேவில் வடா பாவ் சாப்பிட நின்றிருந்த பெண்ணிடமிருந்து ரூ. 5 லட்சம் மதிப்புள்ள தங்கச் சங்கிலி, மொபைல் போன் உள்ளிட்டவற்றை ஒரு திருடன் பறித்துக் கொண்டு ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. பட்டப்பகலில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
புனேவைச் சேர்ந்த வயதான தம்பதியினர் வங்கிக்குப் போய் விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். வழியில் வடா பாவ் சாப்பிடுவதற்காக ஒரு சாலையோர ஹோட்டலுக்கு சென்னறனர். வடா பாவ் வாங்குவதற்காக கணவர் ஹோட்டலுக்குள் செல்ல, மனைவி ஸ்கூட்டருக்கு அருகே நின்று கொண்டிருந்தார்.
அவருக்கு அருகே வெள்ளை நிற சட்டை போட்டு ஒரு நபர் நின்றிருந்தார். அப்போது அந்த இடத்திற்கு முகத்தில் மாஸ்க் போட்ட ஒரு நபர் பைக்கில் வந்தார். அந்த நபர், மூதாட்டியைப் பார்த்து, கீழே ஏதோ கிடக்குது பாருங்க என்று கூப்பிட்டார். இதையடுத்து பாட்டி என்ன ஏது என்று பார்க்க ஆரம்பித்தார். அப்போது வெள்ளைச் சட்டை போட்ட நபர், ஸ்கூட்டரில் வைக்கப்பட்டிருந்த கைப்பையை எடுத்துக் கொண்டு மின்னல் வேகத்தில் ஓடி விட்டான்.
என்ன நடந்தது என்பதை ஊகிக்க முடியாத அந்தப் பெண் பிறகு சுதாரித்துக் கொண்டு கத்தியபடி அந்த நபரைத் துரத்தினார். ஆனால் அந்த நபரோ பறந்து விட்டார். அந்தப் பையில் ரூ. 5 லட்சம் மதிப்புள்ள தங்கச் சங்கிலி, மொபைல் போன், வங்கி ஆவணங்கள் உள்ளிட்டவை இருந்ததாம்.
இதுகுறித்து போலீஸில் புகார் தரப்பட்டுள்ளது. போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். வடா பாவ் சாப்பிடுவதற்காக காத்திருந்த பாட்டியிடம் இப்படி பட்டப் பகலில் துணிகரமாக நடந்த திருட்டு அதிர வைத்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்