திருநாகேஸ்வரத்தில்.. 9 விளக்கேற்றி சுவாமி தரிசனம் செய்த.. முதல்வர் ரங்கசாமி!
கும்பகோணம்: மகாளய அமாவாசையையொட்டி, நவகிரகங்களில் ராகு பகவானுக்குரிய ஸ்தலமாக போற்றப்படும் திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமி கோவிலிலும் , அதே பகுதியில் அமைந்துள்ள திருபுவனம் கம்பகேஸ்வரர் சுவாமி கோவிலிலும் புதுச்சேரி முதல்வர் சுவாமி தரிசனம் செய்தார்.
நவகிரகங்களில் ஒன்றான ராகு பகவான் திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமி கோவிலில் தனி சன்னதியில்
அருள்பாலிக்கிறார். இத்தலத்தில் ராகு பகவான் திருமண கோலத்தில் நாக வல்லி, நாக கன்னி என்ற இரு மனைவிகளுடன் மங்கள ராகுவாக எழுந்தருளியுள்ளார்.
திருமண தடை, பித்ரு தோஷம், சர்ப்ப தோஷம், களத்ர தோஷம், மாங்கல்ய தோஷம், நீங்க ராகு பகவானுக்கு பாலாபிஷேகம் செய்து வழிபடுவது இத்தலத்தின் சிறப்பாகும். அதே போல் அம்மனுக்கு
கிரிகுஜலாம்பிகை என்ற தனி சன்னதியும் உண்டு.
மயிலாடுதுறை- கும்பகோணம் சாலையில், திருபுவனம் என்ற கிராமத்தில் அமைந்துள்ளது கம்பகேஸ்வரர் திருத்தலம். இத்தலத்தில் வரகுண பாண்டியன் என்ற மன்னன் பயத்தினால் ஏற்பட்ட நடுக்கம் நீங்க கம்பகேஸ்வரர் (கம்பை- நடுக்கம்) பெருமானை வழிபட்ட ஸ்தலமாகும். இத்தலத்தில் அறம் பலத்த நாயகி என்ற பெயரில் அம்மன் காட்சியளிக்கிறார் .
இங்குள்ள சரபேஸ்வரர் சன்னதி மிகவும் சிறப்பு பெற்றதாகும். இவர் தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார் .
இத்தல சரபேஸ்வரரை வணங்கினால் வியாதிகள், மனக் கஷ்டங்கள், கண் திருஷ்டி, எதிரிகள் தொல்லை போன்றவை நீங்கி கல்வி ஆரோக்கியம், ஆயுள் விருத்தி, பதவி உயர்வு போன்ற காரியங்கள் தடையின்றி நிறைவேறும் என்ற நம்பிக்கை உள்ளது.
இத்தகு பெருமைமிகு தலத்தில் புதுச்சேரி மாநில முதல்வர் ரங்கசாமி வருகை தந்தார். அவருக்கு திருக்கோவில் சார்பாக பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து புதுச்சேரி மாநில முதல்வர் ரங்கசாமிக்கு ராகு ஸ்தலம் நாகநாதர் சுவாமி சுவாமிக்கு 9 விளக்கு ஏற்றி தரிசனம் செய்தார். இங்குள்ள
கிரிகுஜலாம்பிகை அம்மன் சன்னதிக்கு சென்று வழிபட்டார்.
இதனைத் தொடர்ந்து திருப்புவனத்தில் உள்ள ஸ்ரீ கம்பகேஸ்வரர் சுவாமி தேவஸ்தானத்தில் ஸ்ரீ சரபேஸ்வரர் கோயிலிலும் வழிபாடு செய்தார்.