புதுச்சேரியில் 1 முதல் 8ம் வகுப்பு வரை ஆல் பாஸ்.. அமைச்சர் நமச்சிவாயம் அதிரடி அறிவிப்பு!
புதுச்சேரி: புதுச்சேரியில் 1 முதல் 8ம் வகுப்பு வரை ஆல் பாஸ் நடைமுறை இந்த கல்வி ஆண்டில் தொடரும் என கல்வி அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசால் நிர்வகிக்கப்படும் பள்ளிகளில் 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு கட்டாய தேர்ச்சி முறை ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு சென்ற ஆண்டு திடீர் என அறிவித்தது. அனைவருக்கும் கல்வி வழங்கும் நோக்கோடு, கல்வி உரிமைச் சட்டம் 2009ல் அமல்படுத்தப்பட்டது.
இதன்படி குறைந்தபட்சம் துவக்க கல்வி கிடைக்கும் வகையில், 8ம் வகுப்பு வரையில் அனைத்து மாணவர்களையும் பாஸ் ஆக்கும் நடைமுறை 2019ல் உருவாக்கப்பட்டது. இந்த திட்டத்தை 16 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்கள் கைவிட்டன. ஆனால் மத்திய அரசு நடத்தும் பள்ளிகளில் அனைவரும் பாஸ் திட்டமே நடைமுறையில் இருந்தது. இந்த முறையில் திடீர் என கடந்த ஆண்டு மத்திய அரசு மாற்றம் செய்தது.
மத்திய அரசின் இந்த அறிவிப்பால் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் புதுச்சேரியில் ஆல் பாஸ் முறை ரத்து செய்யப்பட்டதாக அம்மாநில கல்வி அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்திருந்தார். இது குறித்து மேலும் பேசிய அமைச்சர், புதுச்சேரியில் 5 முதல் 8ம் வகுப்புகளுக்கு தேர்வு நடத்தப்படும். மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்தவே இந்த முடிவு என்றும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இந்த கல்வியாண்டில் 1 முதல் 8ம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி தொடரும் என்று கல்வி அமைச்சர் நமச்சிவாயம் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் இந்த திட்டம் ஏற்கனவே நடைமுறையில் தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.