ஜனவரி 20ம் தேதி .. புதுச்சேரியில் அனைத்துப் பள்ளிகளுக்கும் விடுமுறை.. காரணம் இதுதான்!
புதுச்சேரி: ஜனவரி 20ம் தேதி புதுச்சேரி மற்றும் காரைக்காலில் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் கல்வி நிறுவனம் நவோதயா வித்யாலயாக்கள். இந்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் நிதி உதவியின் கீழ் நடத்தப்படும் ஒரு தன்னாட்சி அமைப்பாகும். இது நவோதயா வித்யாலயா ஸ்மிதியால் நிர்வகிக்கப்படுகிறது. ஆறாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான திறமையான குழந்தைகளுக்கு நவோதயா வித்யாலயாக்கள் இலவச கல்வியை வழங்குகின்றன.
இதில் சேர்வதற்காக திறமையான பள்ளி மாணவர்களுக்கு தேர்வு நடத்தப்படும். இந்த தேர்வின் மூலம் வெற்றி பெறும் மாணவர்களுக்கு உணவு, உடை, இருப்பிடம் அனைத்தும் இலவசமாக வழங்கப்படும். நவோதயா வித்யாலயா பள்ளியில் சேருவதற்கான நுழைவுத்தேர்வு வருகின்ற 20ம் தேதி நடைபெறுகிறது.
இதனால் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து யூனியன் பிரதேச பள்ளி கல்வி இயக்குநரகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், புதுச்சேரியில் வரும் 20 ந்தேதி நவோதயா வித்யாலயா பள்ளியில் சேருவதற்கான நுழைவுத்தேர்வு நடைபெறுவதால் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடுமுறையை ஈடுசெய்ய பிப்ரவரி 3 ந்தேதி பள்ளிகள் செயல்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.