பங்குனி வெயில் பல்லை காட்டுது.. புதுச்சேரி பள்ளிகளுக்கு கோடை விடுமுறை மார்ச் 24 முதலே ஸ்டார்ட்!

Manjula Devi
Mar 16, 2024,05:51 PM IST

புதுச்சேரி: வெயில் அதிகரித்து வரும் நிலையில், புதுச்சேரியில் உள்ள அனைத்து அரசு  பள்ளிகளுக்கும் வரும் மார்ச் 24 தொடங்கி ஜூன் 2ஆம் தேதி வரை கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


புதுச்சேரியில்  சமீப காலமாக வெயிலின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. மதிய வேளைகளில் சாலைகளில் அனல் பறக்க ஆரம்பித்துள்ளது. இதனால் வெயிலின் தாக்கத்தை சமாளிக்க முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர். இப்பவே பங்குனி வெயில் பல்லை காட்டுதே.. என்பது போல இப்பவே வெயில் இவ்வளவு கடுமையாக இருந்தால், மே மாதங்களில்  இன்னும் வெயிலின் தாக்கம் உச்சத்தை தொடுமோ என்ற அச்சத்தில் மக்கள் பீதியில் உள்ளனர்.


பிளஸ் டூ, பிளஸ் ஒன் மாணவர்களுக்கு பப்ளிக் எக்ஸாம் தற்போது நடைபெற்று வருவதால் மற்ற குழந்தைகள் மதிய வேளையில் பள்ளிக்கு செல்கின்றனர். வெயில் அதிகரித்து வருவதால் இந்த நேரத்தில் குழந்தைகள் பள்ளிக்கு சென்று வருவதில் மிகவும் சிரமம் ஏற்பட்டு வருகிறது. இது தவிர தேர்தல் தேதி அட்டவணைக்கு ஏற்றார் போல், ஒன்று முதல் ஒன்பது வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு தேர்வு தேதியும் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.




இந்த நிலையில்  புதுச்சேரி அரசு, அந்த மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு தொடக்கப்பள்ளி, அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு வரும் மார்ச் 24ஆம் தேதி முதல் ஜூன் இரண்டாம் தேதி வரை கோடை விடுமுறை அறிவித்துள்ளது. ஜூன் மூன்றாம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


இதற்கிடையே, புதுச்சேரியில் 2024 -25  கல்வி ஆண்டுக்கான அரசு பள்ளி மாணவர்கள் சேர்க்கை வரும் மார்ச் 25 முதல்  நடைபெற உள்ளது


புதுச்சேரியை தொடர்ந்து தமிழகத்திலும் கோடை விடுமுறை விரைவில் விடப்படுமா என்ற எதிர்பார்ப்பு பெற்றோர்களிடையே நிலவி வருகிறது. தமிழகத்திலும் வெயில் சுட்டரிக்க ஆரம்பித்து வருவதை கருத்தில் கொண்டு தமிழக அரசு 1 முதல் 9ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு விரைவில் இறுதி தேர்வு நடத்தப்பட்டு விடுமுறை அளித்தால் நன்றாக இருக்கும் என பெற்றோர்கள் கருத்துகள் கூறி வருகின்றனர்.


மேலும் ஏப்ரல் 19ம் தேதி லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டதால் அதற்கேற்ப கோடை விடுமுறை முன்கூட்டியே தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.