புதுச்சேரியில் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சிறுமி குடும்பத்துக்கு ரூ. 20 லட்சம் நிவாரணம்!

Meenakshi
Mar 06, 2024,05:27 PM IST

புதுச்சேரி: புதுச்சேரியில் 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு 20 லட்சம் நிவாரணம் வழங்கி புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி உத்தரவிட்டுள்ளார்.


புதுச்சேரி முத்தியால் பேட்டை, சோலை நகரை சேர்ந்த 9 வயது சிறுமி ஆர்த்தி. இவர் அதே பகுதியை சேர்ந்த பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வருகிறார். சிறுமி வெகு நேரமாகியும் காணவில்லை என்பதால், சிறுமியின் பெற்றோர் அப்பகுதியை சுற்றியும் தேடியுள்ளனர். எங்கு தேடியும் சிறுமி கிடைக்கவில்லை. பல மணி நேரமாகியும் சிறுமி கிடைக்காததினால் அவரது பெற்றோர் முத்தியால் பேட்டை காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளனர். புகாரின் பேரில் போலீசாரும் பல இடங்களில் சிறுமியை தேடியுள்ளனர். தொடர்ந்து 4 நாட்களாக சிறுமியை போலீசார் தேடி வந்தனர். 


இந்நிலையில், நேற்று சிறுமியின் உடல் அவரது வீட்டில் இருந்து 100 மீட்டார் தொலைவில் உள்ள ஒரு சாக்கடையில் சாக்கு மூட்டையில் கட்டப்பட்ட நிலையில் இருந்துள்ளது. சிறுமி இறந்த நிலையில் அந்த மூட்டையில் இருந்துள்ளார். சிறுமியின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இவ்வழக்கை விசாரித்த போலீசார் 2 குற்றவாளிகளை கைது செய்துள்ளனர். 




விவேகானந்தன் என்ற 57 வயதுடையவரும், கருணாஸ் என்ற 19 வயதுடையவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்விருவர் மீதும் போக்சோ வழக்குப்பதிவு செய்து தொடர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.  இந்நிலையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சிறுமிக்கு நீதி கேட்டு புதுச்சேரி முழுவதும் போராட்டங்கள் நடைபெற்ற வருகின்றன. 


இந்நிலையில் புதுச்சேரி முதல்வர் பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிதிவழங்கப்படும் என்று உத்தரவிட்டுள்ளார். தற்போது பிரேதப் பிரிசோதனைக்குப் பின்னர் சிறுமியின் உடல் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சிறுமியை சீரழித்த அயோக்கியர்களுக்கு கடுமையான தண்டனை வாங்கித் தரப்படும் என்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி சிறுமியின் குடும்பத்தினரிடம் உறுதி அளித்துள்ளார்.