புதுச்சேரி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ஊழல்.. நீதி விசாரணைக்கு முதல்வர் உத்தரவிட அதிமுக கோரிக்கை!
புதுச்சேரி: புதுச்சேரியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட பணிகளில் மிகப் பெரிய அளவில் ஊழல் நடந்துள்ளது. இதுதொடர்பாக நீதி விசாரணை நடத்த துணை நிலை ஆளுநரும், முதல்வர் ரங்கசாமியும் உத்தரவிட வேண்டும் என்று புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் கோரிக்கை விடுத்துள்ளார்.
செய்தியாளர்களிடம் இன்று பேசிய அன்பழகன் இதுதொடர்பாக கூறியதாவது:
புதுச்சேரியில் மத்திய, மாநில அரசுகளின் நிதி பங்களிப்புடன் 2017-ம் ஆண்டு சுமார் ரூ.1,800 கோடி அளவில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல திட்டங்கள் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது. 2017-ல் இருந்து 2021 வரை ஆட்சியில் இருந்த திமுக,காங்கிரஸ் கூட்டணி அரசு இந்த திட்டத்தை முழுமையாக செயல்படுத்தாமல் புதுச்சேரி மாநிலத்திற்கு துரோகத்தை இழைத்தன. 2021-ல் பாஜக, என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைந்த பிறகு அவசர கதியில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் முடிவு செய்யப்பட்டன. இதுவரை சுமார் ரூ.700 கோடிக்கு மட்டுமே பணிகள் துவக்கி வைக்கப்பட்டுள்ளன.
துவக்கப்பட்ட பணிகளிலும் சம்பந்தபட்ட அதிகாரிகள் பல்வேறு முறைகேடுகளுடன் திட்டங்களை துவக்கி வைத்ததாக தெரிகிறது. ராஜ்பவன் சட்டமன்ற தொகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் வாழைக்குளம் பகுதியில் சுமார் 370 சதுர அடி அளவில் 220 பயனாளிகளுக்கு 20 கோடி ரூபாய் செலவில் அடுக்குமாடி வீடுகள் கட்டப்படுகிறது. அதே போன்று குமரகுரு பள்ளத்தில் சுமார் 400 சதுர அடி அளவில் 216 பயனாளிகளுக்கு சுமார் ரூ.45.50 கோடியில் பொதுப்பணித்துறை மூலமாக ஸ்மார்ட் சிட்டி நிதியில் இருந்து அடுக்குமாடி வீடுகள் கட்டப்படுகிறது.
வாழைக்குளம் பகுதியில் ஒரு பயனாளிக்கு சுமார் ரூ.9 லட்சத்து 9 ஆயிரம் செலவில் அடுக்குமாடி வீடு கட்டப்படுகிறது. ஆனால் குமரகுரு பள்ளத்தில் ஒரு பயனாளிக்கு சுமார் ரூ.21 லட்சத்து 6 ஆயிரம் மதிப்பில் அடுக்குமாடி வீடு கட்டப்படுகிறது. குமரகுரு பள்ளத்தில் கட்டப்படும் அடுக்குமாடி குடியிருப்பு புதிய டெக்னாலஜி அடிப்படையில் கட்டுவதற்கு டெண்டர் விடப்பட்டது.
தமிழக திருப்பூரை சேர்ந்த குறிப்பிட்ட சென்னை சில்க்ஸ் கட்டுமான நிறுவனத்திற்கு இந்த பணியை வழங்க வேண்டும் என்பதற்காக முடிவு செய்து டெண்டர் விடப்பட்டது. டெண்டர் சம்பந்தமான முதல் இரண்டாம் அழைப்புகளில் டெண்டர் இறுதி செய்யப்படாத நிலையில் 3-ம் அழைப்பில் அரசின் புதிய டெக்னாலஜி அடிப்படையில் அந்த டெண்டரில் கலந்துகொண்ட சென்னை சில்க்ஸ் நிறுவனத்திற்கு டெண்டருக்கு மேல் 7 சதவீதம் அதிகப்படுத்தி சிங்கிள் டெண்டர் அடிப்படையில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
புதிய டெக்னாலஜி என்ற பெயரில் மக்களுடைய வரிப்பணத்தை முறைகேடாக அதிக அளவில் டெண்டர் விடப்பட்டுள்ளது. இது ஒரு விஞ்ஞான ரீதியிலான ஊழலாகும். இந்த டெண்டர் விடப்பட்ட பொழுது ஸ்மார்ட் சிட்டி திட்ட அதிகாரியாகவும், பொதுப்பணித்துறை செயலாளராகவும் அருண், ஐ.ஏ.எஸ். அவர்கள் இருந்தார். புதிய டெக்னாலஜியை பயன்படுத்தி அடுக்குமாடி குடியிருப்பு வீடு கட்ட பொதுப்பணித்துறையில் பி.எஸ்.ஆர் ரேட் என்னவென்றே முடிவு செய்யப்படவில்லை. சுமார் ரூ.20 கோடி அளவில் 216 குடியிருப்பு வாசிகளுக்கு அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட வேண்டிய சூழ்நிலையில் ரூ.45.50 கோடி செலவில் அந்த கட்டுமான பணியை செய்வதற்கு புதுச்சேரி அமைச்சரவை அனுமதி அளித்ததா? அதிகார வர்க்கத்தில் உள்ள ஒரு சில அதிகாரிகள் கூட்டு சதி செய்து இந்த முறைகேட்டின் மீது ஊழல் செய்துள்ளதாக தெரிகிறது.
இந்த அடுக்குமாடி வீடு கட்ட ஒரு சதுர அடிக்கு சுமார் ரூ.4000 செலவாகியுள்ளது. ஒரு சதுரடி நான்காயிரத்தில் ஒரு 7 ஸ்டார் ஓட்டலே கட்டிவிடலாம். எனவே ஸ்மார்ட் சிட்டி நிதியில் குறிப்பிட்ட இந்த பணியில் நடைபெற்ற முறைகேடு சம்பந்தமாக மாண்புமிகு முதலமைச்சர் அவர்களும், துணைநிலை ஆளுநர் அவர்களும் நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். தவறு செய்த அதிகாரிகள் யாராக இருந்தாலும் மக்களுடைய வரிப்பணத்தை வீணடித்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை விசாரணை வளையத்திற்குள் கொண்டுவர வேண்டும் என்றார் அவர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்