Motivation: மனிதம் எனப்படுவது யாதெனில்... பிடிஆர் செய்த இந்த செயல்தான்!
May 18, 2023,02:33 PM IST
சென்னை: ஒரு ஏழை டெய்லருக்கு மிகப் பெரிய உதவியை அளித்து அனைவரையும் நெகிழ வைத்துள்ளார் தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்.
மனிதாபிமானம், மனிதம் எல்லாம் மரித்துப் போய்க் கொண்டிருக்கும் காலம் இது. சாலையோரத்தில் யாராவது மயங்கிக் கிடந்தாலோ அல்லது உதவி தேவைப்பட்டாலோ ஓடோடிச் சென்று உதவி செய்வோர் இன்று அருகிப் போய் விட்டனர். அவரவர் வேலையைப் பார்த்துப் போய்க் கொண்டிருப்பவர்களே அதிகம்.
அதேபோல மனிதாபிமானத்துடன் அடுத்தவருக்கு உதவுவதும் கூட இன்று இல்லாமல் போய் விட்டது. சுயநலம் மலிந்து போய் விட்ட காலகட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இந்த நிலையில் தமிழ்நாடு அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ஒரு மிகப் பெரிய காரியத்தை செய்துள்ளார்.
கடந்த 40 வருடங்களாக, தினமும் 30 முதல் 40 கிலோமீட்டர் நடந்தே சென்று கிழிந்த துணிகளைத் தைத்துத் தரும் பணியினை செய்து வரும் டெய்லர் நாகேஷ் குறித்து சில நாட்களுக்கு முன்பு ஒரு தனியார் யூடியூப் சேனலில் தகவல் வெளியாகி இருந்தது. அந்த காணொளியில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஒரு கோரிக்கை வைத்திருந்தார் நாகேஷ்.
அதில் தான் மிகவும் சிரமப்படுவதாகவும், தனது வாழ்வாதாரத்துக்கு உதவ வேண்டும் என்றும் கோரியிருந்தார் நாகேஷ். இதையடுத்து அவரது கோரிக்கையைப் பரிசீலித்து உடனடியாக நாகேஷுக்கு வீட்டு மனை வழங்க முதல்வர் உத்தரவிட்டார். இந்த நிலையில் தற்போது அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனும் தன்னால் ஆன ஒரு உதவியைச் செய்துள்ளார்.