ராகுலின் தந்தை யார் என்று கேட்டனர்.. அவர்கள் மீது ஏன் வழக்கு போடவில்லை.. பிரியங்கா ஆவேசம்

Su.tha Arivalagan
Mar 26, 2023,12:52 PM IST
டெல்லி:  எங்களது குடும்பத்தை அவமதித்தனர்.. எங்களது தாயை அவமதித்தனர். ராகுல் காந்தியின் தந்தை யார் என்று கூட கேட்டனர்.. இவர்கள் மீதெல்லாம் ஏன் வழக்குப் போடவில்லை. இவர்களையெல்லாம் நாங்கள் பொறுத்துக் கொண்டோம்.. ராகுல் காந்தியின் வாயை அடைக்க இன்று எம்.பி பதவியைப் பறித்துள்ளனர்.. ஆனால் அவர் ஓய மாட்டார் என்று பிரியங்கா காந்தி ஆவேசமாக கூறியுள்ளார்.

ராகுல் காந்தியை எம்.பி. பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்ததைக் கண்டித்து டெல்லியில் சங்கல்ப சத்தியாகிரகம் என்ற போராட்டத்தை காங்கிரஸ் கட்சி மேற்கொண்டது. இன்று முழுவதும் நடைபெறும் இப்போராட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் தலைவர்கள், தொண்டர்கள் பங்கேற்றுள்ளனர்.

டெல்லி ராஜ்காட்டில் நடைபெற்ற இப்போராட்டத்தில் கலந்து கொண்ட பிரியங்கா காந்தி மிகவும் ஆவேசமாக பேசினார்.  இந்தப் போராட்டத்திற்கு டெல்லி காவல்துறை அனுமதி அளிக்கவில்லை. இருப்பினும் அதையும் மீறி போராட்டம் நடைபெறுகிறது.



கூட்டத்தில் பிரியங்கா காந்தி ஆவேசமாக பேசினார். அவரது பேச்சிலிருந்து :

ராகுல் காந்தி மீது வழக்குப் போட்ட நபர் சூரத்தில் இருக்கிறார்.  இந்த வழக்கை ஒரு வருடத்திற்கு நிறுத்தி வைக்க வேண்டும் என்று கோரி அவர் கோர்ட்டில் மனு செய்கிறார். ஆனால் நாடாளுமன்றத்தில் அதானி விவகாரத்தை ராகுல் காந்தி எழுப்பியவுடன், வழக்கு விசாரணைக்கு மீண்டும் எடுக்கப்படுகிறது.  ஒரே மாதத்தில் விசாரணையை முடித்து, ராகுல் காந்திக்கு தண்டனை விதிக்கப்படுகிறது.

உலகின் மிகச் சிறந்த 2 கல்வி நிறுவனங்களில், ஹார்வர்ட் மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகங்களில் படித்துள்ளார் ராகுல் காந்தி.  ஆனால் அவரை பப்பு என்று கொச்சைப்படுத்தினர். ஆனால் அவர் பப்பு இல்லை,, நேர்மையானவர், சாமானிய மக்களின் பிரச்சினைகளை புரிந்து கொள்ளக் கூடியவர், அதற்குத் தீர்வு காணக் கூடியவர் என்பதை அறிந்து அவருக்கு எதிராக திரும்பினர்.

நாடாளுமன்றத்தில் அனல் பறக்க நடந்த விவாதத்தின்போது பிரதமரிடம் சென்று அவரைக் கட்டி அணைத்து தனது அன்பை வெளிப்படுத்தினார் ராகுல் காந்தி. தனக்கு யாருடனும் துவேஷம் கிடையாது என்று பகிரங்கமாக பேசினார். கொள்கை ரீதியாக அனைவரும் வேறுபடலாம்.  ஆனால் துவேஷமே கொள்கையாக எங்களிடம் இல்லை.

எங்களது குடும்பத்தினர் இந்த நாட்டுக்காக பாடுபட்டவர்கள். அதற்காக நாங்கள் வெட்கப்பட வேண்டுமா.. எங்களது குடும்பத்தினர் இந்த நாட்டின் ஜனநாயகத்தைக் காக்க ரத்தம் சிந்தியவர்கள். எங்களைப் பார்த்து வாரிசு அரசியல் என்று சொல்கிறீர்கள்.. அப்படியானால் கடவுள் ராமர் யார்.. அவரும் வாரிசுதானா.. பாண்டவர்கள் யார்.. ?

எனது தந்தையை நாடாளுமன்றத்தில் அவமானப்படுத்தினார்கள். எனது சகோதரரை பலமுறை மீர் ஜாபர் என்று கூறி கேலி செய்தனர். உங்களது அமைச்சர்கள் எனது தாயாரை இழிவுபடுத்தினர். உங்களது முதல்வர்களில் ஒருவர் எங்களது தந்தை யார் என்று கூட கேட்டார். அவர்கள் மீதெல்லாம் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.  இப்படிப்பட்டவர்கள் யாரும் நாடாளுமன்றத்திலிருந்து தகுதி நீக்கம் செய்யப்படவில்லை. அவர்கள் சிறைக்கு அனுப்பப்படவில்லை. அவர்கள் தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து தடை செய்யப்படவில்லை. பலமுறை எங்களது குடும்பத்தை இவர்கள் கேலி செய்தும் கூட நாங்கள் அமைதியாகத்தான் இருந்தோம். எனது சகோதரர் ஓய மாட்டார்.. ஓடிக் கொண்டே இருப்பார் என்று கூறினார் பிரியங்கா காந்தி.