டிசம்பர் 11 முதல் 31 வரை நிறைய நிறைய மழைக்கு வாய்ப்பிருக்கு.. வானிலை ஆர்வலர் செல்வக்குமார் கணிப்பு!

Manjula Devi
Dec 07, 2024,10:08 AM IST

சென்னை: வங்கக் கடலில் உருவாக போகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி கண்டிப்பாக தமிழ்நாடு கரையை நெருங்கும் என்பது உறுதியாகிவிட்டது. இதனால் டிசம்பர் 31 வரை தமிழகத்திற்கு நிறைய மழைக்கு வாய்ப்புள்ளது. அனைத்து மாவட்டத்திலும் இயல்பை விட கூடுதல் மழை பொழவு என்ற நிலையை எட்டும் என தனியார் வானிலை ஆய்வாளர் செல்வகுமார் தெரிவித்துள்ளார்.


வங்கக் கடலில் அடுத்த 12 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருப்பதாகவும், இதன் காரணமாக டிசம்பர் 11, 12, 13, ஆகிய மூன்று நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நிலையில்  உருவாகும் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்திற்கு எவ்வளவு மழை பொழிவு இருக்கும் என்ற விரிவான அறிக்கையை தனியார் வானிலை ஆய்வாளர் செல்வகுமார் வெளியிட்டுள்ளார்.


அதில் அவர் கூறியிருப்பதாவது:




வங்கக்கடலில் உருவாகியிருந்த காற்றழுத்த தாழ்வு நிலை இன்று பகுதியாக மாற இருக்கிறது. அதாவது கடலோடு இணைந்த காற்று சுழற்சி இன்று கடல் பரப்பின் மேலே ஒரு குறைந்த அழுத்த பகுதியாக உருவாகப் போகிறது. இது படிப்படியாக நன்கமைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாகவும், காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலுப்பெற வாய்ப்பு இருக்கிறது. தமிழ்நாட்டின் கடலை நெருங்கும் வரைக்கும் ஒரு நன்கமைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நெருங்கி வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


தமிழ்நாட்டின் கரையோரம் இலங்கையின் கரையோரம் பயணிக்க கூடிய அந்த வலிமையான வெப்ப நீரோட்டத்தை பிடித்துக் கொண்டு அது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே நேரத்தில் வடக்கே சற்று ஏறி வந்தாலும் வரும் வழியிலேயே அது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தீவிரமடையலாம்.


இரண்டு வழித்தடங்களில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற உள்ளது. இரண்டு வழித்தடங்களில் தெற்கே வந்தால் நன்கமைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வட இலங்கை வந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறலாம். இப்போது கண்டிப்பாக தமிழ்நாடு கரை வருவது உறுதியாகிவிட்டது.  அடுத்தடுத்த நிகழ்வுகளும் தமிழ்நாடு இலங்கை கரையோரம் வருவதும் உறுதியாகிவிட்டது.


ஆக  இந்த மாதம் இறுதி வரை அடுத்தடுத்த நான்கு நிகழ்வுகள் வர இருக்கிறது. அதில் எந்த மாற்றமும் இல்லை. அதாவது நிகழ்வோட தீவிர தன்மையை பொறுத்து அது முன்னேறி வடக்கே ஏறுவதற்கு வாய்ப்பாக அமையும். சாதாரணமாக ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதியாகவே வந்தால் அது இலங்கைக்கு வரும். ஒருவேளை நன்கமைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வட இலங்கை வந்து டெல்டா மாவட்டங்களை ஒட்டி வந்தால் வடகடலோர டெல்டா மாவட்டங்களில் எட்டிப் பிடித்து நிறைய மழை பொழிவை கொடுத்து, மீண்டும் மன்னார் வளைகுடா வந்து அனைத்து மாவட்டங்களுக்கும் நிறைய மழை பொழிவை கொடுக்கும். 


புயலாக மாறும் வாய்ப்பும் உள்ளது




ஒருவேளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறினால் இன்னும் கொஞ்சம் வடக்கே முன்னேறி கரையை கடந்து தென் மாவட்டங்கள் வழியாக அரபிக்கடல் செல்லும். இன்னும் கொஞ்சம் தீவிரமடைந்து புயலாக உருவாகும் வாய்ப்பு இருக்கிறது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகும் வரை வாய்ப்புள்ளது. அப்படி அமைந்தால் வட கடலோரம் வரை எட்டிய பிறகு கரை கடந்து அரபிக்கடல் பகுதிகளை நோக்கி மேற்கு மாவட்டங்கள் வழிப்பயணிக்கும். 


ஆகவே நிகழ்வோடு தீவிரத் தன்மை நாளை உறுதியாகிவிடும். தீவிர தன்மையை பொறுத்துதான் கரை கடக்கும் நிகழ்வை அறிவிக்க முடியும். மழைப்பொழிவில் தீவிரம் மாற்றம் இல்லை. அதாவது கடலோரம்  வந்த பிறகு நீரோட்டத்தை பிடித்து வந்தால் அது மிக கனமழை, அதிக கனமழைக்கு வாய்ப்பு உண்டு. எந்த இடத்தில் அதிகப்படியான நேரம் நீடிக்கும்.. எந்த இடத்தில் அது திசை மாறும்..எந்த இடத்தில் அமையும்.. என்பதெல்லாம் வரக்கூடிய மணி நேரங்களில் உறுதியாகி விடும்.


ஆக இன்று காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவானதும் அதன் நகர்வின் திசையை பொறுத்து கண்டிப்பாக நீரோட்டத்தை பிடிக்கப் போகிற எந்த நீரோட்டம் என்பதெல்லாம் கணக்கிடப்பட்டு கண்டிப்பாக கரை கடக்கும் இடம் எது.. அதன் தீவிரத் தன்மை..  எவ்வளவு மழைப்பொழிவை தரும்.. எந்த மாவட்டத்திற்கு எவ்வளவு மழை பொழிவை தரும்.. இவையெல்லாம் நம் ஆய்வறிக்கையில் வெளியிடலாம். ஆனால் ஏற்கனவே மழை பொழிந்த மாவட்டங்களுக்கும் மழை பொழிவு இருக்கும்.


எங்கெல்லாம் மழை இருக்கும்


அதில் உள் மாவட்டங்களை விட கடலோர மாவட்டங்களில் கூடுதலாக இருக்கும். சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம்,புதுச்சேரி, கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், காரைக்கால், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை,தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, இந்த மாவட்டங்களில் 14 ஆம் தேதிக்குள் கண்டிப்பாக மழைப்பொழிவை கொடுக்கும். 


சாதாரண காற்றழுத்த தாழ்வு பகுதியாகவே வந்தால் நிறைய மழை பொழிவை கொடுக்க சாதகம் இருக்கிறது. அதைவிட தீவிரமடையும் பட்சத்தில் நிறைய நிறைய மழைப்பொழிவிற்கு தான் சாதகம்.  குறைந்தபட்சம் கடலோர மாவட்டங்களுக்கு அதிக மழைப்பொழிவை தருகிறது. நான்கு நிகழ்வுகளுமே  டெல்டா மாவட்டங்களுக்கு நிறைய மழைப்பொழிவை கொடுக்க இந்த நிகழ்வுகள் நேரடியாக நெருக்கமாக வந்து அமையும். இதனால் டெல்டா மாவட்டங்களுக்கு அதிக மழைப்பொழிவு இருக்கும். 


டெல்டா மாவட்டங்களுக்கு மழை


காற்றின் நகர்வுகள் மன்னார் வளைகுடாவுக்கு சென்றாலும் டெல்டா மாவட்டங்களுக்கு மழைப்பொழிவு இருக்கும். இந்த இரண்டு நிகழ்வுகளால் மேற்கு தொடர்ச்சி மாவட்டங்களுக்கும் நிறைய மழைப்பொழிவை கொடுக்கும். நான்கில் இரண்டு நிகழ்வுகளில் அனைத்து மாவட்டங்களுக்கும் நிறைய மழைப்பொழிவை கொடுக்கும். நான்கில் மூன்று வடக்கடலோர மாவட்டங்களுக்கு நிறைய மழைப்பொழிவை கொடுக்கும்.நான்கு நிகழ்வுகளும் டெல்டா மாவட்டங்களுக்கு அதிக மழைப்பொழிவை கொடுக்கும். நான்கில் இறுதிச்சுற்று தென் மாவட்டங்கள், தென் மாவட்டங்களில் உள்ள மேற்கு தொடர்ச்சி பகுதிகள், உள் மாவட்டங்களில் மழையை கொடுக்கும். 


ஆக டிசம்பர் 31ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் மழைப்பொழிவை கொடுக்க நான்கு நிகழ்வுகள் இருக்கிறது. பதினோராம் தேதி முதல் 31ஆம் தேதி வரையில் 16 நாட்கள் மழைப்பொழிவு இருக்கும். மீதம் உள்ள நான்கு அல்லது ஐந்து நாட்கள் தான் மழை இல்லாத நாட்களாக இருக்கும். அதிலும் குழப்பமான வானிலையே நிலவும். மழை பொழிந்தாலும் சென்னையில் ஏரி குளங்கள் நிரம்பவில்லை என கூறப்படுகிறது. அதற்கும் இந்த மழைப்பொழிவு ஈடுகட்டும். அனைத்து மாவட்டங்களிலும் ஏரி குளங்கள் நிரம்பி சராசரியை விட கூடுதல் மழை என்ற நிலையை எட்டும் என பதிவிட்டுள்ளார். ‌



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்