என்னா சேட்டை பாருங்க.. சத்துணவு முட்டையை வைத்து ஆம்லேட் போட்ட திருச்சி ஹோட்டல்!

Manjula Devi
Sep 19, 2024,12:20 PM IST

திருச்சி:   திருச்சியில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் அரசு சார்பில் இலவசமாக வழங்கப்படும் சத்துணவு முட்டைகளை பயன்படுத்தி ஆம்லெட் போடும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. இதனை அடுத்து அந்த ஹோட்டலுக்கு மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் படி சீல் வைக்கப்பட்டது. இச்சம்பவம் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


தமிழக அரசு சார்பில் சத்துணவு மையங்கள் மற்றும்  அரசு பள்ளிகளில் குழந்தைகள், கர்ப்பிணி பெண்களுக்கு தினசரி இலவசமாக முட்டைகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி ஒவ்வொரு குழந்தைகளுக்கும் போதுமான ஊட்டச்சத்து கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில் முத்தரையிட்ட சத்துணவு முட்டைகள் கொடுக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 


அரசாங்கம் எதைச் செய்தாலும் இடையில் புகுந்து சிலர் முறைகேடு செய்வார்கள் இல்லையா.. அதேபோல இந்த சத்துணவு முட்டையிலும் சிலர் புகுந்து முறைகேடுகளைச் செய்து வருகின்றனர். தமிழக அரசின் இந்த முத்திரையிட்ட சத்துணவு முட்டைகளை குறைந்த விலைக்கு கொள்முதல் செய்யப்பட்டு மக்களிடம் கூடுதல் விலைக்கு உணவகங்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக புகார் எழுந்தது.




அதேபோல் ரேஷன் கடைகளில் இலவசமாக கொடுக்கப்படும் அரிசி, பருப்பு, பாமாயில், போன்ற பொருட்களையும் ஹோட்டல் உரிமையாளர்கள் குறைந்த விலைக்கு கொள்முதல் செய்து விற்பனை செய்து வருவதாகவும், அதனை பயன்படுத்தி சமைப்பதாகவும் தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தன.


இந்த நிலையில் திருச்சி துறையூரில் செல்லும் சாலையில் பிரபல தனியார் உணவகம், தேனீர் கடையுடன் செயல்பட்டு வருகிறது. இந்த ஹோட்டலில் சத்துணவு முத்திரையிட்ட முட்டைகளை ஆம்லேட் போடுவது போன்ற வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.


இதனைப் பார்த்து பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.  குழந்தைகளுக்கு கொடுக்கப்படும் இலவச முட்டைகளை இப்படி  அதிக விலைக்கு விற்பனை செய்து வருபவர்களுக்கு தக்க தண்டனை அளிக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.


இதையடுத்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஹோட்டலுக்கு சென்று தீவிர விசாரணை நடத்தினர். அதில், சத்துணவு முட்டைகளை குறைந்த விலைக்கு கொள்முதல் செய்து பயன்படுத்தியது தெரிய வந்தது. இதனை அடுத்து மாவட்ட ஆட்சித் தலைவரின் உத்தரவுப்படி  தனியார் ஹோட்டலுக்கு சீல் வைக்கப்பட்டது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்